10 November 2010

பிராஞ்சியேட்டனும் புனித பிரான்சிஸும்

ரஞ்சித் இயக்கத்தில் ‘கேரளா கஃபே’யும் ரஞ்சித் மம்மூட்டி கூட்டணியில் பலேரி மாணிக்கமும் ,’கையொப்பும் பார்த்து மகிழ்ந்த உற்சாகத்தில் மீண்டும் மம்மூட்டி - ரஞ்சித் கூட்டணியில் ஒரு படம் என்றதும் நிறைய எதிர்பார்ப்புடனும் ஏகெனவே பிரஜாபதி என்ற பாடாவதி படத்தைத் தந்திருந்ததால் கொஞ்சம் பயமுமாகவே பிராஞ்சியேட்டன் த செயிண்ட் படம் பார்க்கச் சென்றேன் நல்ல வேளையாக இந்தக் கூட்டணி என்னை ஏமாற்றவில்லை.

செறம்மல் எனாசு பிரான்சிஸ் - அரிசி வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்து அதன் மூலம் பல கோடிகள் சம்பாதித்திருக்கும் பிரான்சிஸை அனைவரும் அழைப்பதென்னவோ பிராஞ்ஜியேட்டன் என்று. அதை விடக் கொடுமை அரிசி விற்பனை குடும்ப வியாபாரம் என்பதால் பிரான்சிஸை ’அரி(சி)பிராஞ்சி’ என்றழைப்பதுதான்.. கோடிகள் இருந்தாலும் இந்த பட்டப்பெயரைச் சுமப்பது பெரும் அவமானமாக இருக்கிறது பிராஞ்சிக்கு :-) சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெயரெடுத்தபின் கல்வித்தந்தைகளாக மாறி விடும் தமிழக செல்வந்தர்களைப் போல பெரும் செல்வந்தனானதும் தனது கல்வியின்மையை மறைத்து வைப்பதற்காகவும் தனது பட்டப்பெயரைத்
துடைத்து நீக்கவுமாக பிராஞ்சி மேற்கொள்ளும் முயற்சிகளும் (பத்மஸ்ரீ பட்டம் வாங்க முற்படுவது உட்பட) ஒவ்வொருமுறையும் முயற்சிகளில் தோற்பதும் கடைசியில் பட்டங்களை விடவும் நல்ல மனிதனாக வாழ்வது முக்கியமெனத் தீர்மானிப்பதும்தான் படத்தின் மையக் கதை.

ஆனால், இந்தக் கதையை தெளிந்த நீரோடையில் குளிக்கும் அலாதியான ஆனந்த அனுபவத்தோடு சொல்லியிருக்கிறார் ரஞ்சித். கதைக்குள் நாமே ஒரு பாத்திரமாக மாறி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நிலையை உருவாக்க ரஞ்சித்தால் முடிந்திருக்கிறது. புனித பிரான்சிஸை ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி சம சமூகத்தில் உலவவிடும் சாமர்த்தியமெல்லாம் ரஞ்சித் போன்று வித்தியாசமாக யோசிப்பவர்களுக்கே சாத்தியமாகும் போலும்.யதார்த்த உலகிற்கும் மாய உலகிற்குமான இந்தப் பயணத்தை ரஞ்சித் மிகச் சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்

இயக்குனர் ரஞ்சித்தைப் பொறுத்தவரை படத்துக்குப் படம் வேறுபடும் அவரது கதை சொல்லும் பாங்குதான் அவரைத் திறமைமிக்க இயக்குனராக அடையாளம் காட்டுகிறதென்று சொல்ல வேண்டும். பிரான்சிஸ் என்ற மனிதன புனித பிரான்சிஸோடு உரையாடும் காட்சியோடு தொடங்கும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் அங்கதமும் சமூகம் மீதான கேலியும் கிண்டலும் ரஞ்சித்தின் அற்புதமான கதை சொல்லும் போக்கும் இந்தப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. சமூகத்தின் மீதான கேலி என்றால் போகிற போக்கில் அல்ல. ரஞ்சித் அதற்குண்டான அழுத்தத்தோடே அதனைப் பதிப்பதுதான் ரஞ்சித்தின் அபரிமிதமான திறமை. அரசியல், மதம்,வணிகம், மனிதாபிமானம் என்று எல்லாப்பக்கஙக்ளையும் தொட்டுச் செல்லும் ரஞ்சித்தின் பேனா நகைச்சுவையைப் பரவலாக அள்ளித் தெளித்து கயிற்றின் மேல் நடக்கும் இந்த வித்தையை மிக எளிதானதாக்கியிருக்கிறது

புனித பிரான்சிஸோடு பிராஞ்சி உரையாடும் தருணங்களெல்லாம் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம். அதைப் போன்றே பதம்ஸ்ரீ விருது வாங்க பிராஞ்சி செய்யும் முயற்சிகளும் இயல்பான நகைச்சுவையால் மிளிர்கிறது.(அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நேரடியாகச் சாடாமல் அதை ஒரு பகடியாக முன்னெடுத்திருக்கும் ரஞ்சித்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை) ஒரு நடுத்தர வயது மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளைக் கூட மிகுந்த எழுச்சியோடு சொல்லியிருப்பதில் ரஞ்சித்தின் மிளிரும் வசனங்களுக்குப் பெரும் பங்குண்டு

மம்மூக்கா - இந்தக் கதாபாத்திரத்தைச் செய்வதற்காகவே அவதரித்த மனிதனைப் போல வாழ்ந்திருக்கிறார் மனிதன். ராஜமாணிக்கம் போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரம் ஏற்றிருந்தாலும் ஒரு முற்றிலும் புதிய பரிமாணத்தில் கலக்கியிருக்கிறார் இந்தப் படத்தில்  . கதாபாத்திரத்தின் திருச்சூர் வட்டாரப் பேச்சு வழக்கில் கலக்கினாலும், அப்படிப்  பேசுவது மட்டுமே இந்தப் பாத்திரத்தை முழுமைப்படுத்தாதென்றுணர்ந்து அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார் மம்மூக்கா. அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் முக பாவங்களும் ... அற்புதம்

இன்னசெண்ட், ப்ரியா மணி ஜெகதி, டிம்மி டாம், சித்தீக் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் (புனித பிரான்சிஸ்), குஷ்பூ என்று அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக வாசு மேனனாக வரும் இன்னசெண்டை இப்படிப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று? புகுந்து விளையாடியிருக்கிறார் இன்னசெண்ட். அரிபிராஞ்சி என்ற பெயரை துடைப்பதற்காக அவர் சொல்லும் திட்டங்களும் அது தோற்கும்போது அடுத்தத் திட்டத்திற்கான முனைப்புடன் அவர் காட்டும் சவடாலும்..கலக்கல்.

படத்தின் இரண்டாம் பாகம் இன்னமும் கொஞ்சம் நறுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கூட அது ஒரு பெரும் குறையாகத் தென்படவில்லை. ஔசேப்பச்சனின் இதமான பின்னணி இசையும் வேணுவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.படத்தின் இறுதியில் இது ஒரு ரஞ்சித் குழுவினரின் படமென்று போடுகிறார்கள் அப்படிப்போடுவதற்கான தகுதியும் பெருமையும் நிச்சயம் அவருக்குண்டு.

தவிர்க்கப்பட முடியாத மலையாள திரைப்படங்களில் ”பிராஞ்சியேட்டன் & த செயிண்ட்” டுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு

7 பின்னூட்டங்கள்:

எஸ்.கே said...

நல்லாருக்கு விமர்சனமும் பட அறிமுகமும்! வாழ்த்துக்களும் நன்றிகளும்!

ஜோ/Joe said...

நன்றி அண்ணாச்சி ..கண்டிப்பா பாத்துடுவோம்.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்

எம்.எம்.அப்துல்லா said...

எதோ ஒரு இடுகை.. எப்படியோ எழுதியமைக்கு நன்றி

(சொல்ற ஆளு யாருன்னு பாருங்க)

:))

பரக்கத் said...

நன்றி.. அண்ணாச்சி! இங்கே அபுதாபியில் 'எல்டொராடா'வில் இன்னும் ஓடிக்(?)கொண்டிருக்கிறது...நேத்துக்கூட அந்தப்பக்கமா போனப்ப, எப்புடி இருக்கும் படம்? 25 கொடுத்து தியேட்டர்ல பாக்கற மாதிரியா/ இல்ல கழுத...5 குடுத்து சி.டி.யிலயா? (ஒரிஜினல்தான்) அப்புடின்னு ஒரே யோசனை. இன்னைக்குக் கண்டிப்பா பாத்துப்புட்டுத்தேன், மறு சோலி...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அண்ணாச்சி நலம் தானே? பட அறிமுகத்துக்கு மிக்க நன்றி,விரைவில் பார்த்து விடுகிறேன்

SELVENTHIRAN said...

சாத்தான்குளத்துல இருக்கேன். இங்கன உள்ள ரெண்டு தியேட்டர்லயும் வசனங்கள் தேவைப்படாத முன் நவீன யாத்ரீக யதார்த்தவாத மலையாள திரைப்படங்களைத் திரையிட்டுள்ளார்கள்.

LinkWithin

Blog Widget by LinkWithin