லாலேட்டன் என்ற அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்த்தி வைத்து வெறும் படம் காட்டிக் கொண்டிருந்த இயக்குனர்கள் மத்தியிலிருந்து ஒருவேளை வெளியேறாமலேயே போய்விடுவாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான் அவருக்கும் நமக்கும் ஆறுதலாக வந்திருக்கிறது “ஷிக்கார்’ திரைப்படம்
கடந்த காலத்தின் இறக்கி வைக்க முடியாத பாரங்கள் துரத்தி வேட்டையாடும் பலராமன் என்ற லாரி டிரைவர். பல்ராமனுக்குப் பின்னால் எப்போதும் மறைந்திருக்கும் எதிரிகளின் கால் நடமாட்டம். இதனாலேயே பலராமனின் வாழ்க்கை நிச்சயமில்லாத கேள்விக்குறியாகிறது. சந்தர்ப்பங்களுக்கு இரையாகும் நாயகனை சந்தர்ப்பங்களே வேட்டையாடும் கதைதான் இந்த மலையாள வேட்டைக்காரன்
‘ஈற்ற’(மூங்கில்) வெட்டும் காலம் குறித்தும் அதன் பின்னணியில் சிற்றாழ என்ற ஊர் தயாராவது குறித்துமான ஆரம்ப காட்சிகள் அது தொடர்பான ஏதோசுவாரஸ்யமான சம்பவஙக்ளைச் சொல்லப்போகிறதோ என்று பார்த்தால் லாலேட்டன் ‘லோரி’ ஓட்டி வந்து நின்று சண்டை போட ஆரம்பித்ததும் ‘தொலைஞ்சுதுடா சாமி!’ என்ற அலுப்பு துவங்கியது. தொடர்ந்த ஜெகதி மற்றும் சுராஜ் வெஞ்ஞாரம்மூடு (என்ன எழவு பேருடா இது?!) இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடித்த லூட்டிகள் மேலும் அலுப்பைத் தந்து ‘கடைசியில் என் விதி இப்படியாயாகணும்’ என்று யோசிக்கத் துவங்கிய வேளையில் படம் சூடுபிடிக்கத் துவங்கியது.
இடைவேளைக்குப் பின் ஆந்திர மாநிலத்தை நோக்கிய கதையின் பின்னகர்வுதான் கதையை முன்பகுதிக்குச் சற்றும் தொடர்பில்லாமல் அதி வேகத்துடன் நகர்கிறது. அப்துல்லா என்ற மக்கள் இயக்கத் தலைவனை நக்சலைட் என்று போலிஸ் வளைத்துப்பிடிக்க முனைகிறது. ஆந்திரமாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் பலராமன் அப்துல்லா வீட்டிற்குச் சென்று தந்திரமாக அப்துல்லாவை போலிஸ் வளையில் விழ வைக்கிறார். அப்துல்லாவை தந்திரமாக அழைத்துச் செல்லும் அந்த ஜீப் பயணத்தில் தந்திரமாகக் கைது செய்யப்பட்ட பின்னரும் ஆத்திரப்படாத, தான் சகப்போவது குறித்த கவலையின்றி ’என் மக்களுக்குச் செய்ய வேண்டிய நிறைய பணிகள் மிச்சமிருக்கின்றன’ என்று மட்டுமே ஆயாசப்படுகிற நக்ஸலைட் என்று அதிகார வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட அப்துல்லா என்ற மாந்த நேயம் மிக்க மனிதனின் மறுமுகம் தெரிய வருகிறது.
பலராமன் முன்னிலையிலேயே அப்துல்லா குண்டுகளுக்கிரையாக அப்துல்லாவின் மனைவி தனது கணவனின் இறப்புக்குக் காரணமான பலராமனைத் தேடி வந்து அவனால்தான் தன் கணவ்ன் கொல்லப்பட்டான் என்பதை தனது மகனுக்குச் சொல்லி விட்டு பலராமன் முன்னிலையிலேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டு மாண்டு போகிறாள். தான் அறியாமல் செய்த கொலைக்காகத் தன்னை வேட்டையாடும் நக்சல்களுக்குப் பயந்து விசாகப்பட்டினம் செல்லும் பலராமன் அங்கு அப்துல்லாவின் ஆதரவாளர்களின் பழிவாங்கும் செயல் காரணமாக மனைவியை இழக்கிறான். தான் மேலும் வேட்டையாடப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மீதமிருக்கும் தன் மகளின் வாழ்க்கையை முன்னிட்டு கேரளாவில் அடர்காடு நிறைந்த சிற்றாழவிற்கு பலராமன் குடிபெயர்கிறான் என்றாலும் அங்கும் அவனைத் தேடி வருகிறது அறியாமல் உடந்தையாகிப் போன கொலையின் நிழல். அதை எப்படி பலராமன் எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் உச்ச காட்சி.
கரன் தாப்பருடனான சமீபத்திய நேர்முகம் ஒன்றில் ஆசாத் என்ற மாவோயிஸ்டை அரசு தந்திரமாகக் கொன்றது குறித்து அருந்ததி ராய் பேசியிருந்தார். படத்தின் பின் பகுதியைப் பார்க்கும்போது இந்த நேர்முகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அதிகாரவர்க்கம் தனது கோரக்கரங்களை தனது இலக்கிற்கெதிரானவர்கள் மீது திணித்து கழுத்தை நெறிக்க முனைவதைக் கத்தியின் மேல் நடக்கும் லாவகத்துடன் திரைக்கதையாக்கியிருக்கிறார் சுரேஷ் பாபு. இதற்காகவே முன்பாதியை அங்குமிங்குமாக அலைய விட்ட அவரை மன்னிக்கலாம்.
தோழர் அப்துல்லாவாக தனது ‘ஜனதா’வை முன்னேற்றத் துடிக்கும் துடிப்புள்ள போராட்டக்கார இளைஞனாக மிகச் சிறிய பாத்திரமென்றாலும் அசாத்தியமாகச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. மோகன்லாலின் மகளாக நாடோடிகள் நாயகி அனன்யாவும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
ஸ்னேஹா ஒரு பாடலுக்கு லாலேட்டனுடன் நடித்துவிட்டு அநியாயத்துக்கு அரிவாள் வெட்டுப்பட்டு செத்துப் போகிறார்.மிகச்சிறிய பாத்திரமென்றாலும் லக்ஷ்மியின் பாத்திரம் படத்திற்கு கனம் சேர்க்கிறது. தன் மகனைப் பார்த்து ‘இவன் தான் உன் தகப்பன் சாகக் காரணமானவன். இந்த முகத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்’என்று கண்களில் ஆவேசம் கொப்பளிக்க அவர் பேசும்போது அந்தப்பெரிய கண்கள் நிறையவே பேசுகின்றன
லாரி டிரைவராக லாலேட்டன் வரும்போது ’ப்ரம்மரம்’ நினைவுக்கு வருவதையும், ஒரு நக்சலைட்டுடன் ஈர்க்கப்படும் வித்தியாசமான சூழல் ‘தலப்பாவு’ படத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் லால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். தான் வேட்டையாடப்படுவோமென்ற உணர்வுடனும் பதைப்புடனும் அவர் இயங்கும்பொழுதுகளில் அவரது உடல்மொழியும் அவரது முகபாவனைகளும் அவர் ஏன் நல்ல நடிகராகப் போற்றப்படுகிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது
என்றாலும்
படத்தின் நாயகன் என்னைப் பொறுத்தவரையிலும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பிள்ளைதான்.. கடவுளின் சொந்த நாட்டை அத்தனை அழகாக உள்வாங்கியிருக்கிறது அவரது கண்கள். அடர் காடுகளும் அருவிகளும் ஓடைகளும் வறண்ட புழுதி பூமியும் கண்களுக்குப் பெரும் விருந்தாகியிருக்கிறது. வழக்கமான ஆதிரப்பள்ளியைத்தாண்டியும் காடுகள் இருப்பதும் அந்தக் காட்டினுள் தன்னிஷ்டத்துக்கு காமெரா புகுந்து விளையாடியிருப்பதும் மிக மிக நேர்த்தி. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ’சிற்றாழ’யோடு இணையும்போது பெருநகரக் கான்க்ரீட் காட்டில் வசிக்கும் எனக்குப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை
முற்பகுதியை மோகன்லாலுக்காக வணிகப்படுத்த முயலாமல், லால் போடும் தமிழ்ப்பாட்டு குத்தாட்டம், சூரஜின் நகைச்சுவை இம்சைகளைத் தவிர்த்து இன்னமும் நறுக்காகச் செய்திருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்து இன்னமும் மனதில் ஆழமாகப் பதியும்படியாகச் செய்திருக்கலாம்தான். என்றாலும் இரண்டாம்பகுதியில் திரைக்கதை நகரும் வேகமும் சொல்லப்பட்டிருக்கும் சேதியும் மிகச் சிறந்த நடிகர்களின் ஆளுமையும் இந்தப் படத்தைத் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாகச் செய்துவிடுகின்றன
பத்மராஜன் என்ற இளைஞர் இயக்கிய திரைப்படம் இது. மலையாளத் திரை உலகில் புதிய எண்ணங்களோடும் திறமையோடும் புதிய இயக்குனர்கள் வலம்வரத் துவங்குவது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்
இந்த வேட்டைக்காரன் பார்க்கப்படவேண்டியவன் தான்
6 பின்னூட்டங்கள்:
வேட்டைக்காரன்னு சொன்னதும் படிக்காம விட்டுட்டேன் அண்ணாச்சி.. நல்ல வேளை, நம்ம தல பஸ் விட்டதும் திரும்ப வந்து படிச்சேன்...
இதற்கு ஏன் வேட்டைக்காரன் தலைப்பு!!!
நன்றி அண்ணாச்சி. நானும் படம் வந்தபோதே பார்த்துவிட்டேன்.
விமர்சனம் எழுதத்தான் உங்களை நினைத்து பயமாக இருந்தது..! அதனால்தான் எழுதவில்லை..!
அண்ணாச்சி வேட்டைக்காரன் என்னும் காவியத்தின் தலைப்பை இதற்கும் வைத்ததற்கு உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இன்னும் பார்ககலை அண்ணாச்சி....பார்த்துடறேன்...
மிக நன்றாக உள்ளது விமர்சனம்!!!
அது என்னாங்க?! 'கடவுளின் சொந்த நாடு, கடவுளின் சொந்த நாடு'ன்னு எல்லாருமே சொல்றீங்க! அப்படின்னா, அமெரிக்கா, ஆப்பிரிக்கால்லாம் அவருக்கு 'எனிமி' நாடா?! #டவுட்டு!
பூமி மொத்தமுமே அவுருக்குதான்னா எல்லா இடத்தையும் ஒரே மாதிரிதானே அவரு பார்க்கணும்?! ஏன் இந்த பார்ஷியாலிட்டி? #டவுட்டு2
அப்புறம், என்னண்ணு தெரியல... மலையாளப் படங்களின் மேல் ஒரு மோகம் வந்துவிட்டது எனக்கு. மலையாள நண்பர்களிடம் சொல்லி கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த மலையாளப் படங்களை சேகரித்து ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன். சமீபகாலமாக வெளியாகி வெற்றிநடை போடும் படங்களையும் பார்த்துவருகிறேன். (மொழி தெரியாமலேயே, 30 சதவீதத்திற்கு மேல் புரிந்துகொள்ள முடிவதும் ஒரு காரணம் என நினைக்கிறேன்!) :)
Post a Comment