'அண்ணாச்சி! சும்மா கோவப்படாதிய! எதுக்குக் கத்துதியன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்?'
'ஆமாலே! எல்லாம் புடிச்சு மோளத் தெரியாத பச்சப்புள்ளைய பாரு. ஒண்ணும் தெரியாம இருக்கதுக்கு? எல்லாம் உங்க சேக்காளிதாம்ல. பொண்ணு பாக்கச் சொன்னாம்லா? நடுவக்குறிச்சில போய் பாத்துட்டு வந்த பொண்ணு வேணாமாம் '
'சரி. அதுக்கு ஏன் கோவப்படுதிய? வேற பொண்ணு பாக்க வேண்டியதுதானே?' என்று தோசை சொன்னதும் சீறினார் கதிரேசன் அண்ணாச்சி
'ஆமால. செப்புல செஞ்சு அடுக்கி வச்சிருக்கு பாரு. இதுல இல்லேன்னா அதுல எடுக்கதுக்கு?
கேணத்தனமால்லா இருக்கு. நாலு பொண்ணு அஞ்சு பொண்ணு பாத்தா சரி ஒழிஞ்சு போட்டுன்னு விடலாம். சவத்த நாப்பது அம்பது பொண்ணு பாத்துட்டு முடி சரியில்ல மடி சரியில்லன்னுட்டுல்லா கெடக்கான் உன் கூட்டாளி? என் கையில் கெடச்சான்னு வை. வாரியலால சாத்திப்போடுவேன்' இரைந்து பேசும்போது மூச்சு வாங்கியது கதிரேசன் அண்ணாச்சிக்கு. அவர் சொல்லச் சொல்ல நாங்கள் அவருக்குத் தெரியாமல் சிரிப்பைப் பெரும் சிரமப்பட்டு அடக்கிச் சிரித்துக் கொண்டோம்.
விசயம் இதுதான். நண்பர்களில் ஒருவனான செல்வகுமாருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை கிடைத்திருந்தது. தினமும் காலை 7 மணிக்கு திருநெல்வேலிக்கு போய் இரவு 9மணிக்கு வீடு திரும்புதல் வழக்கமாகி விட்டது. சாதாரண கணக்கு உத்வியாளர் பணிதான். ஆனால் ஆறுமாதத்தில் பணி நிரந்தரமானதும் மாவட்ட ஆட்சியருக்குண்டான தோரணை வந்து விட்டது பயலுக்கு. பழைய நண்பர்களோடு சாரம் உடுத்திக்கொண்டு தெருவில் நடப்பது கூட 'கௌரவக் குறைச்சலாக'ப் பட்டது அவனுக்கு. ஊருக்குள் நாராயணசாமிக்குப் படம் பார்க்கப் போவதென்றால் கூட 'கால்குழாய்'தான்
எப்போதும் 'குழாயோடே' இருப்பதைப் பார்த்து விட்டு ஒருநாள் கதிரேசன் அண்ணாச்சி கேட்டார்.
'எலே படுக்கும்போதாவது இந்தக் கொழாயக் கழத்துவியா?'
செல்வன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
' என்னலே சிரிக்க? எலே! சொல்லுதேன்னு தப்பா நெனைக்காத மக்கா. நலலா இருப்பலே. படுக்கும்போதாவது கழத்திட்டு படுலே...இல்லன்னா கொட்டை அவிஞ்சிடப் போவுதுடே!'ன்னு அவர் சொன்னதும் கூடியிருந்தவர்கள் சிரிக்க செல்வன் கடுப்பாகிப் போனான்.
'பெரிய மனுசன் மாதிரியாவே பேசுதீரு? சல்லிப் பயலுவளைக் கூட்டிக்கிட்டு திரிஞ்சா இப்படித்தானவே பேச வரும். உம்ம கிட்ட மனுசன் பேசுவானா?' என்று சொல்லி ஆவேசமாகக் கிளம்பிப் போய்விட்டான்.
அதன் பின் பழைய நண்பர்களைக் கண்டாலே ஒதுங்கத் துவங்கினான் செல்வகுமார். பழைய நண்பர்களோடு பேசுவதும் சுற்றுவதும் தனது கௌரவமான பணிக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதி அவன் ஒதுங்கினாலும் ஊழ்வினை காரணமாக செல்வனுக்குப் பெண் தேடும் பொறுப்பு ஊரின் ஒரே திருமணத் தரகரான கதிரேசன் அண்ணாச்சியிடமே ஒப்படைக்கப்பட்டது
கதிரேசன் அண்ணாச்சி காட்டிய சில படங்களை முதலிலேயே மறுத்து விட்டான் செல்வன். 'பொண்ணு நல்ல கலரா இருக்கணும்' என்ற முதல் நிபந்தனைக்கு 'எலே! பொண்ணு நல்ல காளி மார்க் பவண்டா மாதிரி கலராத்தானடே இருககா?' என்று கேட்டு கதிரேசன் அண்ணாச்சி சிரித்தது செல்வனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவுமில்லை ரசிக்கவுமில்லை
'இதப் பாருங்க. பொண்ணு எப்படி இருக்கணும்னு நான் சொல்லுதேன். அதுப்படி பொண்ணு பாருங்க' என்று சொல்லி விட்டு செல்வன் இட்ட நிபந்தனைகளைக் கேட்டுவிட்டு கதிரேசன் அண்ணாச்சி சிரித்த சிரிப்பில் அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது
'எலே! மக்கா! சரியான கோட்டிக்கார ... யானா இருப்பான் போல. பொண்ணு சொவப்பாவும் இருக்கக் கூடாதாம் கறுப்பாவுமிருக்கக் கூடாதாம். மாநிறமா இருக்கணுமாம். டீச்சர் வேலைதான் பாக்கணுமாம். அக்கா, தங்கச்சி இருக்கக் கூடாதாம். ஒரு தம்பி அல்லது ஒரு அண்ணன் மட்டும் இருக்கலாமாம். பொண்ணோட அப்பா குடிக்கக் கூடாதாம்"
"அது ஏன் அண்ணாச்சி அப்படி??"
"ஆமா. நாளைக்கு இவன் வாங்கி வச்சிருக்குற சரக்கை அவங்க மாமனார் குடிச்சிடக் கூடாதுல்லா. அதான் ரோசனையா சொல்லியிருக்கான் போல" என்றான் சுடலை கொஞ்சமும் சிரிக்காமல். இப்படி சத்தமில்லாமல் பேசி அடுத்தவர்களை உருண்டு சிரிக்க வைக்கும்போதும் எப்படி அமைதியாக அவனால் சிரிக்காமல் இருக்க முடிகிறதென்று பலமுறை ஆச்சரியப்படுத்தியிருக்கிறான் சுடலை.
'பொண்ணுக்கு முடி முழங்கால் வரைக்கும் இருக்கணுமாம்' என்ற அடுத்த நிபந்தனைக்கு சவத்துப் பயலுவ சொன்ன பதிலை இங்கே எழுதினால் பெண்ணியவாதிகள் பொங்கியெழுவார்களென்பதால் அதை விவரிக்க இயலாமல் போவதற்கு வருந்துகிறேன்.
செல்வனின் ஒவ்வொரு நிபந்தனையுமே இப்படி கடுமையான கேலிக்குள்ளாக்கப்பட்டது. இருந்தும் தனது தொழில் என்பதால் கதிரேசன் அண்ணாச்சி ரொம்ப மெனக்கெட்டார். பக்கத்து ஊர்களில் இப்படியொரு பெண் கிடைப்பதரிது என்பதை விட அப்படியே கிடைத்தாலும் இவனுக்குக் கட்டிவைத்து நாளைக்கு ஏன் சங்கடப்பட வேண்டுமென்பதற்காக நடுவக்குறிச்சி, ஏரல், குரங்கணி, ஆழ்வார்திருநகர், தருவை, நாங்குநேரி வரை தனது அக்டோபஸ் கிளைகளை விரித்தும் செல்வன் தேடிய பெண் கிடைக்கவில்லை.
எல்லாம் சேர்ந்து அமைந்து வந்த நடுவக்குறிச்சி பெண்ணை செல்வன் நிராகரித்ததற்கு காரணம் அந்தப் பெண் முதுகலை படித்திருந்ததுதான். 'நானே பி ஏதான் படிச்சிருக்கேன்? அவ எம் ஏ படிச்சா எப்படி என்னை மதிப்பா?' என்று செல்வகுமார் கேட்டானாம்
'இவன் பிஏ படிச்சானா பீயப் படிச்சானான்னே தெரியலை. இவனுக்கு இருக்குற குணத்துக்கு எவ வந்தாலும் இவனை சல்லிக் காசுக்கு மதிக்க மாட்டாங்குறது இந்த அருதலிக்கு தெரியுதா பாத்தியா? அவனை விடு. இந்த எழவெடுத்த பயலுவளுக்கெல்லாம் பொண்ணு பாக்கத் திரிதேன். பாரு என்னச் சொல்லணும்லே! ' என்று சலித்துக் கொண்டார் கதிரேசன் அண்ணாச்சி.
'எலே சாய்பு! ஒரு உதவி செய்தியாடே?!'
'சொல்லுங்க அண்ணாச்சி'
'எலே! நெசம்மாவே அவனுக்குக் கல்யாணம் கட்டணும்னு ஆசை இருக்கா. இல்லேன்னா சும்மா வெளயாண்டுகிட்டு இருக்கானான்னு கேட்டு சொல்லுடே! புத்தி தெளீஞ்ச ப்ய மாதிரியா பேசுதான் அவன்? இவன் கேக்க மாதிரி பொண்ணுக்கு இனிமே கடையில செய்யச் சொல்லிதான் வாங்கணும்' என்று அவர் கவலைப்பட்ட்தால் நான் செல்வனிடம் பேசினேன்.
செல்வன் ரொம்பத் தெளிவாக இருந்தான். ' மக்கா! ஒரு தடவதாண்டே கட்டுதோம்? அப்ப தேடிப் பாத்துதாண்டே கட்டணும்.அவசரப்பட்டா நடக்குமா? இன்னும் ரெண்டு வருசம் போனா போவட்டும். ஆனா. நான் சொல்லுத மாதிரி பொண்ணு இருந்தாத்தான் கல்யாணம் செய்வேன். என்ன மக்கா சொல்லுத?!"
ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டேன். சென்னை வந்த சில நாட்களிலேயே துபாயில் வேலை வாய்ப்பு கிடைத்து அடுத்த வருடம் ஊர் போவதற்குள் நண்பர்களில் பாதி பேருக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. கதிரேசன் அண்ணாச்சியைக் காண நேர்ந்தபோது செல்வனுக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது
'எலே! அந்தக் கோட்டிக்காரனுக்கு கோட்டி முத்திப் போயிடுச்சு. கதிரேசன் அண்ணாச்சி இனிமே அவனுக்காவ பொண்ணு பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு தெரியுமா?' என்றான் கோடாங்கி.
'என்னத்துக்குடே!?"
"அண்ணாச்சி ஒரு பொண்ணைப் பாத்துட்டு வந்திருக்காரு. அவன் கேட்ட மாதிரியே எல்லாம் சரியாத்தான் இருந்திருக்கு. பொண்ணு வாத்திச்சி. நாலாப்பு படிச்சி கொடுக்கு. ஒரே ஒரு தம்பிதான் நல்ல நெறம்தான். முடி வேற நல்ல நீளமாத்தான் இருக்கு. மாமனாருக்கு வசதி எல்லாம் இருக்கு. அவர் குடிக்க வேற மாட்டாரு"
"பொறவென்னடே?!"
"பொறவென்னவா? பொண்ணோட அம்மா பாக்க நல்லா இல்லேன்னு சொல்லி வேண்டான்னு சொல்லிட்டானாம்"
"நெசம்மாவாடே சொல்லுத?"
"இந்தச் சவத்து மூதிய வச்சு எப்படித்தான் அவங்கய்யா மேய்க்காருன்னே தெரியலியே?"
இந்த உரையாடல் நடந்து முடிந்த மூன்றாண்டுகளுக்குப் பின் ஊரில் கதிரேசன் அண்ணாச்சியை சந்தித்தபோது 'எலே! ஊருக்கு வரும்போது எனக்குக் கொஞ்சம் ஜெண்டு வாங்கி வரதுக்கென்ன? நாங்க ஜெண்டடிச்சா மணக்க மாட்டமாடே?' என்றார். அவரது கடையில் வழக்கமாகக் கூடும் ஆட்களை எல்லாம் காணவில்லை
'எங்க அண்ணாச்சி ஒருபயலையும் காணோம்?' என்றேன்
'எங்க வரப் போறானுவ? முன்னால கல்யாணம் ஆவாம கெடந்துச்சு. வந்து கெடந்து ஊர்க் கதய் மேஞ்சுக்கிட்டு கெடந்தானுவ. இப்ப அவனவனுக்குக் கல்யாணமாயிப் போச்சுல்லாடே. பொண்டாட்டி சொன்னாத்தானே அவனவன் மூத்திரத்துக்கே போதான். எழவெடுத்த பயலுவளை என்ன செய்யச் சொல்லுத?' சிரித்தார் கதிரேசன் அண்ணாச்சி.
சொல்லி அவர் முடிக்கவும் 'ஏ! மாமா எப்படி இருக்கிய?' என்ற குரல் கேட்டது
'அட! வாங்க மருமவப் புள்ள. நல்லா இருக்கியளா? மவ எப்படியிருக்கா?' என்று குசலம் விசாரித்தார் கதிரேசன் அண்ணாச்சி. யாரை நலம் விசாரிக்கிறார் என்று திரும்பினால் அட.. நம்ம செல்வன் தான்.
'ஏய் என்னடே சின்னாரு.. எப்படிடே இருக்கே? " என்றான் செல்வன்
'நல்லா இருக்கேன் மக்கா!'
'அங்க துபாய்ல எப்படிடே?'
'ம்ம் நல்லா இருக்கு'
'அங்க பஸ்ல்லாம் உண்டுமாடே?!'
'ம்ம் இருக்கு.'
'அங்க நல்ல வெயிலடிக்கின்னு சொல்வாங்கல்லாடே! அதான் இப்படி கறுத்து போயிட்ட போல"
நான் லேசாகச் சிரித்து வைத்தேன்
'எத்தனை நாளைக்குடே ஊருல இருப்ப?'
'சாயங்காலம் இல்லன்னா காலைல் கிளம்பிடுவேன்'
'அப்படியா? பாத்து கன நாளாச்சுல்லாடே. உக்காந்து கொஞ்சம் பேசலாம்னுதான் நெனைக்கேன் ஆனா வூட்டுக்காரிக்கு லேசா மேலுக்கு சரியில்ல. அதான் அவசரமா கெளம்பிட்டு இருக்கேன். சரி மககா! பாப்போம் வரட்டா?' என்று பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினான் செல்வன்.
நான் கதிரேசன் அண்ணாச்சியைப் பார்த்தேன். வாயை விகாரமாகத் திறந்து கொண்டு சிரித்தார் அவர்.
'எலே சாய்பு! உன் சேக்காளியப் பாத்தியாளே? எனக்கு பொண்ணு அப்படி வேணும் இப்படி வேணும்னு என்ன பாடு படுத்துனான். சரி. வயசுப்பய. ஆசப்படுதானேன்னு நானும் ரொம்பத்தான் ஓடியாடி பொண்ணு தேடுனேன். ஆனா அதுக்காக இப்படிப் படுத்துவான்னு நெனைக்கவே இல்ல.எத்தனை பொண்ணு பாத்தேன்? படுத்தில்லா எடுத்துட்டான்" லேசாக யோசனையில் ஆழந்து விட்டு தொடர்ந்தார்
'ஒரு கட்டத்துல நான் நொந்து போய், 'எலே ! இனிமே பொண்ணு பாக்கச் சொல்லி என் கிட்ட வந்தா வாரியலால அடிப்பேன் ஓடிப்போயிடு' ன்னு சொல்லிட்டேன். அந்த நேரம் பார்த்து அவன் சேக்காளிங்களுக்கெல்லாம் ஒருத்தனுக்குப் பின்னால ஒருத்தனுக்குக் கல்யாணமாவ ஆரம்பிச்சுது. மொதல்ல இவன் கண்டுக்காமத்தான் இருந்தான் ஆனா நாளாவ நாளாவ அவனவனுக்குக் கல்யாணமெல்லாம் நடந்து புள்ள குட்டின்னு ஆனதும் இவனுக்கு உதற ஆரம்பிச்சுது. சுத்து வட்டாரத்துல இவன் பொண்ணு பாத்துட்டு பண்ணுன சேட்டையெல்லாம் தெரிஞ்சு வில்லுப் பாட்டா பாட ஆரம்பிச்சிட்டானுவளா. இவனுக்குப் பொண்ணுன்னாலே கேக்கப் போறவனைத்தான் மொதல்ல வெட்டுவானுங்கங்குற மாதிரி நெலம மாறிடுச்சு" கொஞ்சம் இடைவெளி விட்டார்.
'நானும் இந்தப் படுக்காளிக்கு இனிமே பொண்ணு பாக்கக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிட்டு விட்டுட்டேன். அப்புறமா ஒருநாளு 'அண்ணாச்சி! மத்ததெல்லாம் விடுங்க. பொண்ணு டீச்சரா இருக்கா மாதிரி மட்டும் பாருங்க' ன்னு அவங்கய்யா வந்து சொல்லிட்டுப் போனாரு.அவரு என்ன இருந்தாலும் மருவாதையுள்ள மனுசன்லா? அவருக்காவப் பொண்ணு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா, அதுக்குள்ள இவன் வண்டவாளம் தெரிஞ்சு சுத்து வட்டாரத்துல ஒருபயலும் பொணணு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.இப்படியே மூணு வருசம் ஓடிப் போனதும் பயலுக்கு ரொம்பப் பயமெடுத்துடுச்சு. கூடச் சேர்ந்த பயலுவ எல்லாம் கல்யாணம் பண்ணி புள்ளயும் பெத்து புள்ளைக்கு மொட்டை போட திருச்செந்தூருக்குப் போகும்போது இந்தப் பயலை சீந்த ஒருத்தனும் இல்லாமப் போச்சு. அப்பதான் பயலுக்கு அறிவு வந்துச்சு. வந்து என்ன சொன்னான் தெரியுமா?" சொல்லி விட்டு அடக்க முடியாமல் சிரித்தார் அண்ணாச்சி
'அப்படி என்னத்த சொன்னான் அண்ணாச்சி?' ன்னு கேட்டும் அவரால் அடக்கவே முடியவில்லை
'வே! அண்ணன் மவளைக் கட்டிக் கொடுத்திருக்கோமேங்குற மருவாதை இல்லாம எதுக்குவே அவனைக் கேலி பண்ணுதீரு?' என்றவாறே வந்தார் சுப்பையா அண்ணன்
'என்னது அண்ணன் மவளா? யாரு? வசந்தியா?' என்றேன் ஆச்சரியமாக. எனக்குக் கதிரேசன் அண்ணாச்சியின் அண்ண்ன் மகள் வசந்தியைத் தெரியும். அவள் என் பள்ளித் தோழியும் கூட. ஆனால், அவள் பத்தாம் வகுப்பைத் தாண்டியதாக எனக்கு நினைவில்லை. அவளுக்கு நான்கு சகோதரிகள் வேறு. எனது முகத்தில் தெரிந்த குழப்ப ரேகையைப் புரிந்து கொண்டது போல அண்ணாச்சி சொன்னார்
' விடுடே!! அவனோட அன்னைய நெலமைக்கு பசு மாட்டுக்குப் பாவாடை தாவணி மாட்டி விட்டிருந்தா கூட சரின்னு சம்மதம் சொல்லிக் கல்யாணம் பண்ணியிருப்பான் ' சொல்லி விட்டுத் திரும்பவும் சிரித்தார் கதிரேசன் அண்ணாச்சி.
எனக்குப் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது.
அடுத்த நாள் காலைதான் புறப்பட முடிந்தது. பேருந்தில் சன்னலோரம் அமர்ந்து கொண்டேன். சந்தை வழியாகப் பேருந்து கடந்த போது லுங்கி உடுத்திக் கொண்டு செல்வன் எல்லாக் குடும்பஸ்தர்களையும் போல மஞ்சள் பையில் காய்கறி வாங்கிக் கொண்டு நடந்து செல்வதைப் பார்த்தேன். அருகில் வசந்தி ஏதோ பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்ததையும். எல்லாம் எனக்கு முழுவதுமாகப் புரிந்தது போல் இருந்தது.கதிரேசன் அண்ணாச்சியின் அடக்க முடியாத சிரிப்பு நினைவுக்கு வந்ததும் என்னையறியாமல் புன்னகைத்துக் கொண்டேன்
நன்றி: அமீரகத் தமிழ் மன்றம்
பத்தாம் ஆண்டு விழா மலர்

6 பின்னூட்டங்கள்:
சவத்து மூதிங்க ..இப்படித்தானே அழும்பு பண்றாய்ங்க..அது கிடக்கு..அந்த வசந்தி புள்ள பவண்டோ கலரா டொரினோ கலரான்னு சொல்லவே இல்லையே..
நல்லா இருக்கு நீங்க தான் அமிரக அண்ணாச்சியா??
//வண்ணான் said...
நல்லா இருக்கு நீங்க தான் அமிரக அண்ணாச்சியா??//
ஆமாங்க. இவருதான் அமீரகத்துல எல்லாருக்கும் அண்ணாச்சின்னு சொல்லிட்டு திரியறாரு..
இவண்,
அண்ணாச்சி பேரவை
ஷார்ஜா
ஓய் அண்ணாச்சி கேட்டீரா...... எங்க ஊர்லயும் இப்படி தான் நாலஞ்சு பயக்க அது நொன்ன, இது நொன்னன்னு சொல்லீட்டு பெண்ணு கெட்டாம சுத்தீட்டு இருக்கானுவ...ஊருக்கு போவம்ப உம்ம கதைய அந்த கிறுக்கு பயக்களுட்ட குடுத்து படிச்ச சொல்லணும்..... அப்பையாவது வெளங்குவானுவளான்னு பாப்போம்..
'ஒரு வயசுக்கு மேல..........' என்று நீண்ட நாள் திருமணமாகாத இன்ஜினீயர் அண்ணண் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
Post a Comment