23 June 2010

’கேரளா கஃபே’

மிகப் பெரும் பொருட்செலவு, பெரும் நடிகர்கள், பெரும் இயக்குனர்கள் என்று எல்லாம் மிகப் பெரிதாக எதிர்பார்த்துச் செல்லும் தமிழ்ப்படங்களெல்லாம் இலவச ஆப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கும் இந்த நேரத்தில் மனதைக் குளிர்விப்பதாய் அமைந்தன இரண்டு படங்கள் இரண்டுமே மலையாளப் படங்கள்தான்

எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்துப் படமெடுப்பதென்பதொன்றும் மலையாளத்தில் பெரிய அதிசயச் செயலில்லை. (ட்வெண்டி ட்வெண்டி அவ்வாறு எடுக்கப்பட்ட படம்தான்) அப்படியிருக்க 10 இயக்குனர்களை வைத்து  ஒரே படத்தில் வேலை செய்ய வைப்பதென்பதும் அத்தனை பெரிதாக இருக்க முடியாதுதான் - மலையாளத் திரைப்பட உலகைப் பொறுத்தவரை

ஆனால், 10 இயக்குனர்கள் பத்து சிறுகதைகளைக் குறும்படங்களாக இயக்குவதென்பதும் அந்தச் சிறுகதைகள் ஏதேனும் ஒரு சம்பவத்தோடு தொடர்புபடுத்துவதுமாக மிக வித்தியாசமான சிந்தனையை மிகச் சிறப்பாகச் செய்தே முடித்திருக்கிறார் எழுத்தாளரும் இயக்குனருமான ரஞ்சித். ப்ரஜாபதி போன்ற அதிதீவிர மரண மொக்கைப்படங்களை எடுத்த இதே இயக்குனர்தான் கையொப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார் அதுகுறித்த என் பதிவு இங்கே. இம்முறையும் ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் சிறப்பு

அடூர் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே நாலு பெண்ணுங்கள் படத்தில் நான்கு சிறுகதைகளைப் படமாக்கி படுத்தியிருந்தார். ஆனால் இந்த 10 குறும்படங்களும் அதுபோன்ற கலைப் பாசாங்குகளை உதறிவிட்டு எளிய பார்வையாளனுக்கும் சேரும்படியான படைப்பாக மிளிரச் செய்திருப்பதுதான் ரஞ்சித்தின் வெற்றி

காதல், துரோகம், உலகப் பொருளாதார நெருக்கடி, தற்கொலை மரணங்கள், மனிதம் என்று பல்வேறு தரப்பட்ட சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இயக்குனரும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை சுமார் 10 நிமிடங்களுக்கான குறும்படங்களாக  இயக்கியிருக்கிறார்கள்.  ஷாஜி கைலாஸ், லால் ஜோஸ், அன்வர் ரஷீத், ஷ்யாம் பிரசாத், பத்மகுமார், அஞ்சலி மேனன், ரேவதி, உதய் அனந்தன், ராம கிருஷ்ணன் என பத்து இயக்குனர்கள். இந்த எல்லாக் குறும்படங்களும் ஒரு தொடர்வண்டி நிலைய உணவகமான ‘கேரளா கஃபே’ என்ற உண்வகத்தோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது

ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசம் நிறைந்த ஒவ்வொரு சிறுகதையைக் காட்சிப்படுத்தியிருந்தாலும் மனதில் அசத்தலாகப் பதிந்து விடுவது அன்வர் ரஷீதின் ‘ப்ரிட்ஜ்’(பாலம்)  குறும்படம்தான்.

சலீம்குமார், கல்பனா நடித்திருக்கும் இந்தப் படம் படுக்கையில் ‘ஒன்றுக்குப்’ போய்விடும் கண்பார்வையற்ற செவிப்புலன் குறைந்த தாயைப் பற்றியது. தனது மூத்த மகன் நகரத்துக்கு அழைத்துப் போவான் எனக் காத்திருக்கும் அந்த மூதாட்டிக்கு அவன் இறந்து போன செய்தி கூட மறந்து போய்விடுமளவுக்கே அவளது புலன்கள் செயல்படுகின்றன. அவளை எங்காவது கொண்டு விட்டுவிடும்படி நச்சரிக்கிறாள் மனைவி. வழியில்லாமல் தன் தாயை அழைத்துக்கொண்டு அவளுக்குப் பிடித்த உணவு, அவள் விரும்பிய இடங்கள் என்று நகரத்தைச் சுற்றிக்காட்டி விட்டு இறுதியாக ‘நாடோடிக்ள்’ பட்த்திற்கும் அழைத்துச் சென்று விட்டு இடைவேளையின் போது அவளை அங்கேயே விட்டு விட்டு அழுதபடியே தன் இடத்திற்குத் திரும்புகிறான்

கதையின் இன்னொரு பக்கத்தில் சிறுவனொருவன் குட்டிப்பூனையொன்றைக் கொஞ்சி விளையாடுகிறான் தெருவில்வளர்ந்த பூனையை வீட்டில் வைக்கக் கூடாதென்று வீட்டை விட்டு வெகுதொலைவு சென்று விட்டுவிட்டு வருகிறார் தந்தை. பையன் அழுது அடம் பிடிக்கிறான். தந்தை கொஞ்ச நேரம் போனால் சமாதானமாகிவிடுவான் என சமாதானம் கொண்டுவிடுகிறார் ஆனால் காய்ச்சல் வந்து மகன் அவதிப்படுவது கண்டு கலங்கிப் போய் பூனையை விட்டெறிந்த இடத்தில் தேடுகிறார் தந்தை. பூனை கிடைக்காமல் திரும்பி வரும்போது தாயை விட்டு விட்டு மகன் பேருந்தில் ஏறிச் செல்கிறான் இருப்பதைத் தொலைத்தவனும் தொலைத்ததைத் தேடியவனும் அறிமுகமின்றி கடந்து செல்கிறார்கள்.அடுத்த காட்சியில் அந்த மூதாட்டியின் காலடியில் அந்தப் பூனைக்குட்டி அடைக்கலமாவதோடு நிறைவடைகிறது. நெகிழ வைத்த இந்தக் கதையை அன்வர் படமாக்கியிருக்கும் விதமும் கதையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அற்புதமாக இருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால் இந்த அன்வர்தான் மிகப்பெரும் வணிக வெற்றி பெற்ற ராஜ மணிக்கம், சோட்டா மும்பை, அண்ணன் தம்பி படங்களின் இயக்குனர். அவரிடமிருந்து நெகிழ்வான ஒரு கதை அதுவும் குறும்பட வடிவில் காணக் கிடைத்தது பெரும் ஆனந்தமாக இருந்தது

உன்னி எழுதிய கதைக்கு சுரேஷ் ராஜனின் ஒளிப்பதிவு பிரம்மாதம். மிக நேர்த்தியாக மிகத்தெளிவாக நாடகத்தன்மை தவிர்த்து எடுக்கப்பட்டிருந்த படத்தில் சலீம் குமார் கோழிக்கோடு சாந்தாதேவி ஆகியோர் சிறப்பாக மிகையின்றி நடித்திருந்ததும் மிகப்பெரும் ஆறுதல் படத்தின் ஒளிப்பதிவும் தெய்வத்தின் சொந்த நாட்டை அழகுறப் பதிவாக்கியிருக்கிறது இந்தப் படம் மட்டுமின்றி எல்லாப் ப்டங்களிலுமே ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக நிரைவாக இருக்கிறது

’புறம் காழ்ச்சகள்’ இன்னுமொரு எதிர்பாராத திருப்பத்தோடு முடியும் எளிமையான கதை. மம்மூட்டி, ஸ்ரினிவாசன் போன்ற ‘ஹெவி வெயிட்கள்’ படத்தில் இருந்தும் தங்கள் பாத்திரத்தை மட்டும் அவர்கள் சிறப்பாகச் செய்திருப்பது தமிழ்ப்படவுலகின் ‘ஹெ(ட்)வி வெயிட்களுக்கான பாடம். மீசைமாதவன், சாந்துப்பொட்டு போன்ற வணிகப்பட வெற்றிகளைத் தந்த லால் ஜோஸ்தான் இந்தப்படத்தையும் கதை எழுதி இயக்கியிருக்கிறார். மனதை வருடிய கதைகளில் இதுவும் ஒன்று

’ஐலண்ட் எக்ஸ்பிரஸ்” - இன்னுமொரு சுவாரஸ்யமான கதை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு இடங்களில் உலவும் இவர்களுக்கான மையப்புள்ளி விபத்துக்குள்ளான ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டிதான். அண்டஹ் விபத்தில் தங்களுக்குச் சொந்தமானவர்களை இழந்தவர்களின் கதையை மிக அழகாக நேர்த்தியாகச் சொல்லியிருந்தார் சங்கர் ராமகிருஷ்ணன் ப்ருதிவிராஜ், மணியம் பிள்லை ராஜு, சுகுமாரி, ரஹ்மான் ஜெயசூரியா என ஒரு பட்டாளமே இருந்தும் படம் அதன் மையப்புள்ளியை விட்டு அகலாமல் இருந்தது கவனிக்கத்தக்கது

இதில் ஜெமோவின் பின்தொடரும் நிழலின் குரலில் வரும் சொத்தை கதையைப்போல ஒரு திகில் கதையையும் சேர்த்திருந்தார்கள் திலகன் முக்கிய கதாபாத்திரமேற்றிருந்த அந்தக் குறும்படம் மட்டும் மற்ற படங்களோடு ஒப்பிடுகையில் பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை

ரேவதி இயக்கிய மகளின் கதை திரைக்கதை வசனமும் அவருடையதேதான். சுஹாசினியின் நெல்லைத் தமிழ் வசனங்களைப்போல சொதப்பாமல் ரேவதியாவது நாகர்கோவில் தமிழைப் படத்தில் நன்றாகக் கையாண்டிருந்தார்.

திலீப், சுரேஷ் கோபி நவ்யா நாயர், ஜோதிர்மயி போன்றவர்கள் நடித்த குறும்படங்களும் நன்றாக இருந்தன என்றாலும் சித்தீக் ஸ்வேதா மேனன் நடித்திருந்த ‘அவிராமம்’ அவைகளை விடச் சிறப்பாகவே இருந்தது. மொத்தத்தில் பல்வேறு உணர்வுகளின் கலவையாகப் பார்த்து ரசிக்கும்படியாக இருந்த வித்தியாசமான இந்த முயற்சி மெச்சும்படியாகவே இருந்தது

ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையான, இசங்களோ இன்ன பிற தாலி தட்டுகளோ இல்லாமல் நல்ல படம் பார்க்க நினைப்பவர்களுக்கு கேரளா கஃபே படத்தைப் பரிந்துரைப்பதில் ஒரு தயக்கமும் இல்லை எனக்கு.

16 பின்னூட்டங்கள்:

விழியன் said...

பகிர்விற்கு நன்றி ஆசிப்

manjoorraja said...

பரிந்துரைத்ததற்கும் அழகாக விமர்சித்ததற்கும் நன்றி

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணாச்சி சூப்பர்... பகிர்வுக்கு நன்றி...

உங்களை பதிவு எழுத வைக்கனும்னா நாலு நல்ல மலையளாப்படம் எடுக்கவேண்டியிருக்கு...

ஜெஸிலா said...
This comment has been removed by the author.
ஜெஸிலா said...

//கையொப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார் அதுகுறித்த என் பதிவு இங்கே// எங்கே?

’ராவணன்’ விமர்சனம் எதிர்பார்த்தால் ‘கேரளா கஃபே’ விமர்சனம் வருவதிலிருந்து புரிகிறது. ;-)

//‘ஹெ(ட்)வி வெயிட்களுக்கான பாடம். // நம்ம தமிழ் கதாநாயகர்கள் நடிக்க ஒப்புகொண்டாலும் ரசிகர்களுக்கிடையே தகராறு வருவதை தவிர்க்க முடியாது. ;-(

மறக்காமல் படத்தின் சிடியை கொண்டு தரவும். ;-)

Mohan said...

'கேரளா கஃபே' படம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. 10 கதைகள் இருந்தாலும் அத்தனை கதைகளிலும் பிரிவு (அ) இழப்பை பிரதானமாகக் கொண்டு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாழ்க்கை சூழலைப் பற்றி பேசுவதாக இருக்கும். படத்தைப் போலவே உங்கள் விமர்சனமும் நன்றாக இருந்தது.

குசும்பன் said...

அண்ணாச்சி கேரளா கஃபேயில் மசலா கூடுதலாயிட்டு பிரியாணியும் அச்சாரும் கிடைக்குமா?:)

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணாச்சி என்ன ஆளுவே நீரு...அவம் தொரத்தி தொரத்தி நம்மள நக்கலடிச்சாலும் ஒமக்கு அவம்மேல எப்பவுமே பாசம்தாம்ல :)))

ramachandranusha(உஷா) said...

இந்த நேரத்தில் மனதைக் குளிர்விப்பதாய் அமைந்தன இரண்டு படங்கள் இரண்டுமே மலையாளப்
படம்தான்// அண்ணாச்சி, ஒன்னு (கேரளா க்ஃபே) இங்க இருக்கு இன்னொன்னு எங்கே?
அதுதான் இதுன்னு சொல்லப்பாடது.

க‌ரிச‌ல்கார‌ன் said...

அருமையான‌ ப‌ட‌ம் அண்ணாச்சி

ப‌த்து குறும்ப‌ட‌ங்க‌ளின் பார்வை இங்கே
http://krpsenthil.blogspot.com/2010/04/blog-post_28.html

Raj Chandra said...

>>இறுதியாக ‘நாடோடிக்ள்’ பட்த்திற்கும் அழைத்துச் சென்று விட்டு இடைவேளையின் போது அவளை அங்கேயே விட்டு விட்டு அழுதபடியே தன் இடத்திற்குத் திரும்புகிறான்.

- வண்ணநிலவனின் சிறுகதை ஒன்றும் இதே போல் முடியும்.

>>ஜெமோவின் பின்தொடரும் நிழலின் குரலில் வரும் சொத்தை கதையைப்போல
- விடமாட்டிங்களே :)

வடகரை வேலன் said...

நல்ல விமர்சனம் ஆசிஃப். அந்த இன்னொன்று எங்கே?

தமிழ் பிரியன் said...

அந்த இன்னொன்னு பழேரி மாணிக்கமா?... ;-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் பார்த்துட்டேன் அண்ணாச்சி..!

ஆனா பதிவு போட சோம்பேறித்தனம்..!

மூன்று கதைகளை விட்டுவிட்டால் மிச்சம் நன்றாகவே இருந்தது..!

அத்தனை பேரும் கடைசியாக அந்தக் கடையில் ஒன்று கூடி பின்பு கலைவதைப் போல் எடுத்திருப்பது இன்னும் சிறப்பு..!

இப்போது இதே டாபிக்கில் சூர்யா டிவியில் ஒரு நிகழ்ச்சியே நடந்து வருகிறது..!

அதிலை said...

its a piece of work.. and mammukka's 10 minutes performance and the end of that stories disturbed me a lot.. hats off

Anonymous said...

//அண்ணாச்சி என்ன ஆளுவே நீரு...அவம் தொரத்தி தொரத்தி நம்மள நக்கலடிச்சாலும் ஒமக்கு அவம்மேல எப்பவுமே பாசம்தாம்ல :)))//

அப்துல்லா பாய்

அவர் படிச்சது கேரளா, பகுதி நேர பணியாற்றுவது AsiaNet ல் பாசம் இல்லாமலா போகும்

LinkWithin

Blog Widget by LinkWithin