நோன்புக் காலம் வந்து விட்டால் போதும். எல்லா அங்காடிகளும் சிறப்புத் தள்ளுபடிகள், எல்லா பள்ளிவாசல்களிலும் சிறப்பு வழிபாடுகள், யாரிடம் கேட்டாலும் நோன்பு பற்றிய கருத்துகள் என நோன்புக் காலம் அதன் சிறப்பை நிலைநாட்டிக் கொள்கிறது.வானொலிகளிலும் நோன்புக் காலத்திற்கு சிறப்பு நிகழ்ச்சிகள். ஏசியாநெட் தொலைக்காட்சியில் 9:30 கழிந்தால் இரவு 12 மணி வரை நோன்பைப் பற்றி வாய் வலிக்காது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் ஊடகங்கள் இந்த மத நம்பிக்கை தொடர்பான விசயத்தையும் விட்டு வைத்து விடவில்லை என்பதன் அறிகுறியாகவே இதனை நான் பார்க்கிறேன். சொல்லப் போனால், ஒரே விசயத்தை அளவுக்கதிகமாகப் பேசும்போது இயல்பாக ஏற்படும் அலுப்பும், சலிப்பும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.
நோன்பு என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் அடியானுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையேயான ஓர் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்குப் பொறுப்பாளர்கள் இவ்விருவரே தவிர வேறு யாரும் இல்லை. அப்படியிருக்க, நோன்பைப் பற்றி விளக்கிச் சொல்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்குக் கிளம்பி விடும்போது 'ஆளை விடுங்கப்பா!' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க, செலவில்லாமல் தள்ளி விடுவதற்கென்று மின்னஞ்சல்கள் துணை புரிவதால் நோன்பு திறக்கும்போது என்ன சாப்பிடலாம், தண்ணீரை 50 மி.லிட்டர் குடிக்கலாமா 500 மி.லிட்டர் குடிக்கலாமா, நோன்பு திறக்கும்போது வெங்காய பஜ்ஜி நல்லதா, வாழைக்காய் பஜ்ஜி நல்லதா, வாயு பிடித்துக் கொண்டால் சாப்பிட நல்லது கறிக் கஞ்சியா, தேங்காய் கஞ்சியா என்றெல்லாம் மருத்துவ விளக்கத்தோடு வரும் அறிவுரைகளைப் பார்த்தால் நோன்பு திறந்த பின்னும் நோன்பிருப்பதுதான் நல்லதோ எனத் தோன்றுகிறது.
அதுபோலவே, நோன்புக் காலத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது பற்றியும் அஞ்சல்கள். அஞ்சல்கள். அஞ்சல்கள். சமீபத்தில் ஏசியாநெட் வானொலியில் நோன்பின் சட்ட திட்டங்கள் பற்றி திருச்சி அப்துல் ரஹ்மான் எடுத்துரைத்தார். அப்போது அவர், "நோன்பை இறைவன் எளிதாக்கியிருக்கிறான். எனவே, நோன்புக் காலத்தில் உங்கள் [அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள் ;-)] மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டதோடல்லாமல், பகல் நேரத்தில் "உணர்ச்சிவசப்பட்டு" விட்ட மனிதர் ஒருவருக்கு இரண்டு அடிமைகளை விடுதலை செய்தால் அவரது தவறு மன்னிக்கப்படும் என்றொரு பரிகாரம் சொல்லப்பட்டதையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் என்னைச் சந்தித்த நண்பரொருவர்.. "அடிமைகள் ரெண்டு பேர் வேணுமே? நான் விடுதலை செய்யலாம்னு இருக்கேன்" என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.
பாருங்கள்.. நாம் எந்த நோக்கத்தில் ஒரு விசயத்தைச் சொல்கிறோமோ அதே நோக்கத்தில்தான் அது எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்பது கட்டாயமில்லை. சிலருக்குத் தகவல்களாக நினைத்து நாம் அனுப்பும் இம்மாதிரி அஞ்சல்கள் தலைவலியாகவும் வாய்ப்பிருக்கிறது. இதைப் போலவே இரவில் எவ்வளவு நேரம் தொழுதால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதற்கு தனியாகப் பட்டியலே போட்டுக் கொண்டு ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. இது பெரும் விவாதத்திற்குள்ளாகலாம் என்பதால் அதன் நம்பகத்தனமை குறித்தெல்லாம் நான் விவாதிக்க விரும்பவில்லை.
நான் சமீபத்தில் படித்த ஒரு இசுலாமியப் பேரறிஞர் உங்களால் வழிபாடுகளில் ஈடுபட முடியாத சூழல் என்றால் கேளிக்கைகளில் ஈடுபடுவதை விட உறங்கி விடுவதே மேல் என்று எழுதியிருந்தார். அந்த அற்புத மனிதரைத் தேடி நன்றி சொல்லக் காத்திருக்கிறேன். ;-)
சமீபத்தில் வேண்டப்பட்ட ஒருவரிடமிருந்து தொழாமல் போகிறவர்களை இறைவன் 15 வழிகளில் தண்டிப்பதாக மின்னஞ்சல் இணைப்பு வந்திருந்தது. அதைப் படித்து விட்டு அஞ்சி நடுங்குவதற்குப் பதிலாக ஏனோ எனக்குள் சில கேள்விகள் மட்டுமே எழுந்தன. (அதுபற்றி விரிவாகப் பிறகு எழுதுகிறேன்.)
எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொருவருக்கும் அவர்களது வழிபாடுகள், வணக்க முறைகள், இறைவனை அறிந்து கொள்ளும் முறை பற்றிய புரிதல்கள் இருக்கின்றன. "நான் அனுப்பியிருக்கும் இந்தச் செய்தியை நீங்கள் 25 பேருக்கு அனுப்பினால் இறைவன் உங்கள் வீட்டு அலமாரியைத் திறந்து 5 மில்லியுன் திர்ஹாம் வைத்து சாவியை மறக்காமல் உங்களிடமே தந்து விட்டுப் போவான்" என்பது போன்ற அஞ்சல்களில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இம்மாதிரி அஞ்சல்களை தாட்சண்யமே இல்லாமல் வீசி எறிந்து விட்டுத்தான் மறுவேலை.
இறைவன் தன்னை அடைவதற்கும் புரிவதற்கும் எத்த்னையோ விசயங்களை நம் முன் வைத்திருக்க அவற்றைப் புரட்டி அவனை அறிவதை விட்டு விட்டு மின்ஞசல்களை 25 பேருக்கு அனுப்புவதென்பது எத்தனை கேணத்தனமான செயல்?
ஆகவே, தோழர்களே!! இதுபோல செய்திகள் உங்களுக்கு எந்தப் புண்ணியவாளனிடமிருந்தாவது அனுப்பப்படும்போது திறந்து பார்த்து கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். 25 பேருக்கு அனுப்பிப் புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள். ஆனால், அந்த 25 பேர் பட்டியலில் நான் இல்லாமல் தயவுசெய்து பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றையெல்லாம் படித்து திருந்தி விடும் நிலையை நான் தாண்டி ஆண்டுகள் பலவாகிறது.
இந்த வேண்டுகோளை இந்தப் புனித ரமலான் மாதத்தில் நீங்கள் ஏற்றுக் கொண்டால் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வாய் பேசாத மனைவியரை வாழ்க்கைத் துணையாக்கி உங்கள் வாழ்வை அலங்கரிப்பான் ;-)
*******
மரத்தடியில் முன்பெழுதிய விசயத்தின் மீள்பதிவு। 2006ஆம் டு எழுதிய இந்தப் பதிவு மூன்றாண்டுகள் கடந்து போன பின்பும் நான் எழுதிய மேற்கண்ட விசயத்தில் மாற்றங்களேதுமில்லை இந்த ஆண்டும் மீள்பதிவாகிறது (யப்ப... என்னெல்லாம் காரணம் சொல்ல வேண்டியிருக்கு?)
11 comments:
இன்னும் நூறு வருடம் கழித்துகூட மீள்பதிவு செய்யலாம்.
//ஒவ்வொருவருக்கும் அவர்களது வழிபாடுகள், வணக்க முறைகள், இறைவனை அறிந்து கொள்ளும் முறை பற்றிய புரிதல்கள் இருக்கின்றன. //
அந்த புரிதல் இல்லாதவர்களிடமிருந்து தான் நீங்கள் சொல்கின்ற அஞ்சல்கள் பலருக்கு வந்துக் கொண்டிருக்கின்றன....
//வேண்டுகோளை இந்தப் புனித ரமலான் மாதத்தில் நீங்கள் ஏற்றுக் கொண்டால் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வாய் பேசாத மனைவியரை வாழ்க்கைத் துணையாக்கி உங்கள் வாழ்வை அலங்கரிப்பான் ;-)//
இருக்குற மனைவியை பேசமுடியாமல் செய்ய வழியேதும் இருக்கிறதா!?
:)
எத்தனை வருடம் கழித்து மீள் பதிவு செய்தாலும் இதே நிலமைதான் நீடிக்கும் அண்ணே
இது மாதிரி ஒரு பாடு மெயில்கள் அழித்துக்கொண்டிருக்கிறேன். எங்கேர்ந்துதான் வருமோ இவர்களுக்கு பயபக்தி இந்த மாதம் மட்டும்
அண்ணாச்சி தெரியாமல்தான் கேட்கிறேன். அடிமைகளை விடுதலை செய்தால் "உணர்ச்சிவசப்பட்டு" விட்ட மனிதர் தவறு மன்னிக்கப்படும் என்கிறார். முதலில் சகமனிதனை அடிமையாக வைத்திருந்ததற்கு தண்டனை இல்லையா?
அன்பான நண்பர்களுக்கு
நம் உயிரினும் மேலான நாயகம்(ஸல்)
இந்த உலகிற்கு வந்ததே எதற்கே?
அறியாமையிலிருந்து மக்களை மீட்பதற்குதானே..
அதாவது அன்றைய காலத்தை அய்யாமும் ஜாஹிலிய்யா என்பார்கள்.
மீன்டும் என்ன இந்த கூத்து?
கல்லாமையை இல்லாமை ஆக்க வந்த சமுதாயத்தில்
இந்த அளவுக்கு ஒரு மூட நம்பிக்கையா?
ஆமாம், வாய் பேசாத மனைவி வாங்கி,
நீ ஊருல கடலை போடவா?
ஏன்டா.. கோமுட்டி தலையா?
இறைவன் உங்களுக்கு வாய் பேசாத மனைவியரை வாழ்க்கைத் துணையாக்கி உங்கள் வாழ்வை அலங்கரிப்பான் //annachi ithai naangal wanmayaaga kandikkirom.
//எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் ஊடகங்கள் இந்த மத நம்பிக்கை தொடர்பான விசயத்தையும் விட்டு வைத்து விடவில்லை என்பதன் அறிகுறியாகவே இதனை நான் பார்க்கிறேன். சொல்லப் போனால், ஒரே விசயத்தை அளவுக்கதிகமாகப் பேசும்போது இயல்பாக ஏற்படும் அலுப்பும், சலிப்பும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.//
உண்மையான் உண்மை.
//2006ஆம் டு எழுதிய இந்தப் பதிவு மூன்றாண்டுகள் கடந்து போன பின்பும் நான் எழுதிய மேற்கண்ட விசயத்தில் மாற்றங்களேதுமில்லை இந்த ஆண்டும் மீள்பதிவாகிறது//
ஆயிரம் மீள்பதிவு போட்டாலும் இவங்களை திருத்த முடியாது.
//இந்த வேண்டுகோளை இந்தப் புனித ரமலான் மாதத்தில் நீங்கள் ஏற்றுக் கொண்டால் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வாய் பேசாத மனைவியரை வாழ்க்கைத் துணையாக்கி உங்கள் வாழ்வை அலங்கரிப்பான் ;-) //
எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது.
ஆனால் வாய்பேசாத மனைவியை அளிப்பான் என்று சொல்லி சிரிக்க வைத்துவிட்டீர்கள்...
//நோன்பு என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் அடியானுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையேயான ஓர் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்குப் பொறுப்பாளர்கள் இவ்விருவரே தவிர வேறு யாரும் இல்லை.//
நோன்பு மட்டுமல்ல அண்ணாச்சி தொழுகை, இபாதத்து இப்படி எவ்வளவோ...
# இன்று கூட பள்ளியில் ஒரு தமிழ் நோட்டிஸ் கண்டேன்...மதினாவில் நடந்த உண்மை சம்பவம்..என்றும் 500 பிரதி எடுத்து அதை வெளியிட வேண்டுமென்றும்...என்னத்த சொல்ல...???
# நல்ல வேளை நீங்கள் பதிவெழுதிவிட்டு இதை படிப்பவர்கள் கண்டிப்பாக 10 பின்னூட்டம் போட வேண்டும்...பின்னூட்டம் போட்ட சென்ஷிக்கு அடுத்த நாளே "பெஸ்ட் ப்ளாக்கர்" அவார்ட் கிடைத்தது...போட மறுத்த குசும்பனுக்கு "கரப்பான் பூச்சி விருது" கிடைத்தது அப்படின்னு எதுவும் போடலை...:-)))
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
Post a Comment