13 August 2009

காஞ்சிவரம் - கம்யூனிசத்தின் மீதான விமர்சனமா?

துபாய் உலகத் திரைப்பட விழாவில காஞ்சிவரம் படம் பார்த்து முடிந்ததும் இது குறித்து நடந் கேள்வி பதில் நேரத்தில் இயக்குனர் ப்ரியதர்சனிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.சிரித்துக்கொண்டே அப்படியில்லை என்று மறுத்து விட்டார் இயக்குனர் ப்ரியதர்சன்.

'ஆத்ம திருப்திக்கா படமெடுத்ததாகச் சொன்னீர்கள். உங்களது ஆத்ம திருப்திக்கான படத்தைத் தமிழில் எடுத்தமைக்கு நன்றி! மலையாளத்தில் உங்களுக்கு உகந்த நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். கேரளத்தின் தொன்மையும் மரபுகளும் உங்களுக்குப் பழக்கம். அப்படியிருக்க உங்கள் ஆத்ம திருப்திக்கான படத்தை உங்கள் தாய்மொழியான மலையாளத்தில் எடுக்காமல் தமிழில் எடுக்க ஏன் முனைந்தீர்கள்?" இப்படியொரு புத்திசாலித்தனமான கேள்வியை ப்ரியதர்சனிடம் என்னைத்தவி வேறு யார் கேட்டிருக்க முடியும்?

"உண்மைதான். நான் இந்தப் படத்தை மலையாளத்திலேயே எடுத்திருக்க முடியும். முதலில் மோகன்லாலை வைத்துக்கொண்டு இந்தப் படத்தைச் செய்வதாகத்தான் இருந்தேன். ஆனால், இது வேறொரு காலகட்டத்து தமிழ்ப்படம் அந்தத் தமிழ் உச்சரிப்பெல்லாம் சரியாகச் செய்ய வேண்டுமென்றுதான் அவரை விட்டு விட்டேன். இந்து மதப்படி 'பட்டு' என்பது ஒரு புனிதக்குறியீடாகப் பார்க்கப்படுகிறது. எல்லா விசேசங்களுக்கும் பட்டு அணிவது மதச்சடங்காகவே கருதப்படுகிறதென்றாலும் அதை நெய்பவர்களுக்கே பட்டு அணியும் வாய்ப்பில்லை என்பதைச் சொல்ல முனைந்தேன். மிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியின் தலைவாசல் என்பதால் அதையே களனாகத் தேர்ந்தெடுத்தேன்" என்றார் ப்ரியன்.

ஆனால்...
படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது மலையாள நண்பரொருவர் அதை மறுத்தார். கம்யூனிஸ்டுகளை பலவீனமானவர்களாகவும், பேராசையும் இரக்கத்தன்மை இல்லாதவர்களாகவும் காட்டமுனையும் படத்திற்கு கேரளத்தை அவரால் தளமாகக் கொள்ள முடியாதென்பதால்தான் அவர் தமிழில் படமெடுத்தார் என்றார்.

"தனது மகளுக்காக நெய்த பட்டுப் புடவையைக் கடைசியில் அறுத்தெடுத்து வர ஒரு கதிர் அரிவாள் உபயோகிக்கப்படுவதைக் கவனித்தீர்களா? ஒரு நெசவாளியின் வீட்டில் கதிர் அரிவாள் எங்கிருந்து வரும்?"

"அதைப் போலவே பாதி முடிவடைந்த பட்டுச்சேலையை அறுக்கவே அந்தக் கதிர் அரிவாள் பயன்படுத்தப்படுவதும் கம்யூனிசத்துக்கெதிரான குறியீடு. அதோடு மட்டுமா? ஒரு யூனியனுக்காக வாதாடும் ஒருவன் தனது சொந்த நலனுக்காகக் காட்டிக் கொடுப்பதும் திருடுவதும் கம்யூனிசம் காலூன்றிய காலத்தில் இல்லாதிருந்த விசயங்கள். ஆரம்ப காலத்தில் அரசின் வன்கொடுமைகளை எதிர்த்து கம்யூனிசம் பரவுவதற்குத் தோழர்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் ஒரு தனிமனிதனின் பேராசைக்காக ஒரு இயக்கத்தின் மீது கரி தேய்த்திருக்கிறார். அதை மூடி மறைப்பதற்காக நெசவாளி தன் மகளுக்கே விசம் கொடுக்கும் பரிதாபத்தை முன்வைத்து அனுதாபமும் தேடியிருக்கிறார். அதனால்தான் இந்தப் படத்தை கேரளத்தில் எடுக்கப் பயந்து போய் தமிழகத்தில் சென்று படமெடுத்திருக்கிறார் ப்ரியதர்ஷன்" என்றார் நண்பர்.

அவர் சொல்வதை முற்றாக மறுத்து விட முடியாதென்றுதான் தோன்றுகிறது. படம் ஒரு நெசவாளியின் கதையாக மட்டுமில்லாமல் ஒரு இயக்கம் வேர்விடும்போது தனது சுயநலத்திற்காக அதற்கெதிரான துரோகப் போக்கை மேற்கொள்ளும் திருடனாகவும் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட்டிருப்பதையோ, அவன் திருடுவதையோ படத்தைப் பார்த்தவர்கள் பெரிதாகப் பேசுவதேயில்லை. ஒரு நெசவாளிக்கு தன் ம்களுக்குக் கூட பட்டு நெய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் மட்டுமே பெரிதாக பேசப்படுகிறது. ப்ரியதர்சன் இந்த விசயத்தை மட்டுமே கம்யூனிசப் போர்வைக்குள் நுழையாமல் நேர்மையாக அணுகியிருக்க முடிந்திருக்கும். 'இருவரில்' திராவிடத் தலைவர்களைலக் கொச்சைப்படுத்த முனைந்த மணிரத்னத்தின் அரை வேக்காட்டுத்தனமான முயற்சியைப் போலத்தான் இதுவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஒரு தலைப்பட்சமான தாக்குதல்தான் என்று தோன்றினாலும்.....

யூனியன் தொடர்பான காட்சிகளில் தனது வழக்கமான மெலோ டிராமாக் குரலில் பிரகாஷ் ராஜ் உரக்கப் பேசி எரிச்சலூட்டினாலும் .......

இந்த உள்குத்து விவகாரங்களை விலக்கி விட்டுப் பார்த்தால்

தமிழில் இதுபோன்ற வணிக நோக்கமற்ற ப்டங்கள் வருவது மிகக் குறைவென்பதாலும், பெரும்பாலும் நெகிழ்வோடு பாத்திரத்தன்மை உணர்ந்து நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் நடிப்பிற்காகவும், சாபு சிரிலின் அற்புதமான கலை இயக்கத்திற்காகவும் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசைக்காகவும் இந்த முயற்சி பாராட்டத்தக்கதேதான்.

காஞ்சிவரம் பற்றிய இன்னொரு பதிவு இங்கே

7 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணாச்சி..

படத்தோட கடைசி ஷாட் பார்த்தேளா..?

பிரகாஷ்ராஜ் நடிப்பில் மைல் கல்.. அந்த நிமிர்ந்து பார்க்கும் சிங்கிள் ஷாட்..

இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை..!

அற்புதம்..!

சென்ஷி said...

:))

சரி!

வடகரை வேலன் said...

ஆசிப்,

கம்யூனிசத்தின் மீதான விமர்சனமா இந்தப் படம்? எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை.

மேலும் கம்யூனிசத்தின் மீது வரவேழ்ப்பு, லால் சலாம் போன்ற திரைப் படங்கள் செய்யாத விமர்சனமா?

கேரளவாசிகளுக்கு பட்டுப் புடவைமீது தமிழர்களுக்கு இருக்கும் ஒரு அப்செஸன் இல்லை. அதனால் ப்ரியதர்சன் தமிழில் எடுக்கத் துனிந்திருக்கலாம்.

ஆனால் தமிழில் கம்யூனிசம் மட்டுமல்ல வேரு எந்த சித்தாந்தத்தையும் நேரடியாகக் கேள்வி கேட்டு ஒரு படம் எடுக்க முடியுமா? நமக்குத்தான் சகிப்புத் தன்மை குறைவு.

துபாய் ராஜா said...

//தமிழில் இதுபோன்ற வணிக நோக்கமற்ற ப்டங்கள் வருவது மிகக் குறைவென்பதாலும், பெரும்பாலும் நெகிழ்வோடு பாத்திரத்தன்மை உணர்ந்து நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் நடிப்பிற்காகவும், சாபு சிரிலின் அற்புதமான கலை இயக்கத்திற்காகவும் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசைக்காகவும் இந்த முயற்சி பாராட்டத்தக்கதேதான்//

நிச்சயம் பாராட்டத்தக்கதே.

சுரேஷ் கண்ணன் said...

//ஒரு நெசவாளியின் வீட்டில் கதிர் அரிவாள் எங்கிருந்து வரும்?"//

வெளங்கிடும். அ.ராமசாமி கூட இப்படி யோசிக்க முடியாது. நல்லா இருங்கடே. :-)

ராம் said...

இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா எனபது தெரியவில்லை, ஆனால் சின்ன திரைக்கு வந்து சென்று விட்டது. அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான படம்.

பிரசன்னா இராசன் said...

அய்யோ சாமி. இன்னாமா யோசிக்கிறார் சார் உங்க நண்பர். இருந்தாலும் அதுக்கு ஒரு ஷொட்டு. எனக்கு தெரிந்த மட்டில் இந்த படம் கம்யூனிச இயக்கம் பற்றிய விமர்சனப் படமாக தோன்றவில்லை. இருப்பினும் படத்தின் நுண்ணரசியலை ஆராய்ந்தால், படத்தைப் பார்க்கும் அனுபவம் சுத்தமாகப் போய் விடும் என்பது என் எண்ணம். ‘காஞ்சிவரம்’ பற்றிய பதிவு தான் நான் வலையுலகில் எழுதிய முதல் பதிவு. என் வலைப்பக்கம் வந்து பாருங்களேன்...

LinkWithin

Blog Widget by LinkWithin