01 June 2009

இலங்கை நிலவரம் - ஒரு பார்வை

சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே.

ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள்.
‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும் குமுறல் கலந்த கேள்வி இது

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ஆறு ஆண்டுகளில் வயது போய் இருக்குமா வந்திருக்குமா ?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவருடையது என்று சொல்லப்படும் அந்த உடலை புதைக்கக் கூட இல்லை. ஏன் எரித்தார்கள்? மனிதர்கள் பதில் சொல்ல மறுக்கலாம். காலம் சொல்லாமல் போய் விடுமா என்ன ? சொல்லும். சொல்லி இருக்கிறது.

இட்லரும் முசோலினியும் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். உயர் மனிதர்களாக அல்ல; இழி பிறவிகளாக...! சரித்திரத்துக்கு திரும்பும் ஒரு கெட்ட குணம் உண்டு. அது மோசமாகத் திரும்பும்.

விறகு அடித்த கம்பு மேலும் கீழும் என்பார்கள். காட்டில் விறகு பொறுக்குபவர்கள், பொறுக்கிய விறகை ஒரு விறகால் அடித்து, அடித்து கட்டைச் சரிப்படுத்துவார்கள். கடைசியாக அடித்த கம்பை மேலே வைத்துக் கட்டி தலையில் சுமந்து செல்வார்கள். போட வேண்டிய இடத்தில் ‘தொபுக் கடீர்’ என்று போடும்போது அடித்த கம்பு அடியிலும் அடிபட்ட கம்புகள் மேலேயும் இருக்கும். மனித சரித்திரத்தின் வழி நெடுகிலும் காணக் கூடியது இத்தகைய காட்சிகள் தான்.

வினை விதைத்தவன் தினை அறுக்க மாட்டான் என்பது வெறும் ஒரு வெற்றுச் சொற்றொடர் அல்ல. பட்டுத் தெளிந்தவர்கள் விதைத்துச் சென்ற தத்துவ வித்து அது... ஆகவே, கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு உதவினாரா அல்லது அவர்களை உதறினாரா என்ற ஆராய்ச்சி இப்போது தேவை இல்லை. ராஜபக்‌ஷ கொற்றவரா அல்லது கொடியவரா என்ற கேள்விக்கான பதிலை காலத்திடம் விட்டு விடுவோம். ஆக வேண்டிய பணிகள் என்ன? அதை ஆக்க பூர்வமாகச் செய்வதெப்படி என்பதில் கவனம் செலுத்துவது காரியமாற்றவும் - காயங்களை ஆற்றவும் பயன்படும்.

இலங்கையின் பரப்பளவு 25,000 சதுர மைல்கள். அதில் சிங்கள மக்கள் வாழும் பகுதி 15,000 ச.மை. தமிழர்கள் வாழ்ந்த பகுதி 10,000 ச.மை. கல்-ஓயா நீர்த்தேக்கத்தை கட்டி அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்களை வலிய குடியேற்றியபோது இழந்தவை, கடலில் சென்று வீழ்ந்த மஹாவெலி கங்கை வட மேற்கு மாகாணத்துக்கு திருப்பி விடப்பட்ட போது குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களால் கைவிட்டுப் போனவை, பல லட்சம் பேர் புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் சேர்ந்து கரையான் அரித்த பாயாகி இருக்கிறது தமிழர் பிரதேசம்.

கொழும்பு மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு மூன்று வாக்குகள். அதன் மூலம் இரண்டு சிறுபான்மையினர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ந்தார்கள். இந்தப் பகுதியில் “தோட்டம்” எனப்படும் ஏழைகள் வசிக்கும் குடியிருப்புகள் அதிகம்.
அத்தகைய இடங்களைப் பிரேமதாச அரசு கையகப்படுத்தும். நூறு குடும்பங்கள் குடியிருந்த அந்த இடத்தில் நானூறு வீடுகள் கொண்ட பல அடுக்கு மாளிகை
கட்டப்படும். கட்டி முடிந்ததும் மிகச் சரியாக அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும். அதை பிரேமதாச மிக நேர்மையாகச் செய்தார். சூட்சுமம் எங்கே என்றால் மீதமுள்ள முன்னூறு குடி இருப்புகளிலும் அரசு தனக்கு இஷ்டப்பட்டவர்களை குடியேற்றியது. கொழும்பு மத்திய தொகுதி தன் தனித்தன்மையை இழந்து விட்டது.

வடபுலத்தில் வீடிழந்தவர்கள் எந்த இடத்தை தன்னுடையது என்பார்கள். இரண்டு பக்கமும் கட்டிடங்கள் இருந்து நடுவில் வீதியும் இருந்தால், ஏழாம் இலக்கம் என்னுடையது எட்டாம் இலக்கம் உன்னுடையது என்று உரிமை கொண்டாடலாம். எல்லாமே கட்டாந்தரையாகக் கிடந்தால் எதை வைத்து அடையாளம் காண்பது?

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கோவணத்தையே காணாமல் ஓடிக் கொண்டிருந்தபோது எந்த ஆவணத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொண்டு போயிருக்கப்போகிறார்கள். எந்த அரசு அலுவலகம் இருந்தது அல்லது இருக்கிறது - அவற்றில் தேடிக் கண்டு பிடிக்க. அப்படியே முடியும் என்றாலும் அரசு எந்தக் காலத்தில் இப்போதிருக்கும் முகாம்களிலிருந்து இவர்களை தங்கள் மண்ணுக்குச் செல்ல அனுமதிக்கப் போகிறது.

‘தமிழர் பூமி’ என்ற அடையாளத்தை அழிக்கும் வண்ணம் சிங்களவர்களைக் கொண்டு அங்கு குடியேற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இது என் நிலம் என்று உறுதிப்படுத்தும் ஆவணம் இல்லாதவரை அது அரசு பூமிதான். அந்த பூமியில் அரசு விரும்பும் மக்களை குடியமர்த்தினால் யாரால் என்ன செய்ய முடியும்.

‘ஒன்று பட்ட இலங்கை...இறையாண்மை...இந்த நாட்டின் குடி மகனுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேற உரிமை உண்டு’ என்ற வறட்டுத் தத்துவங்களை தங்களது துணைக்கு அழைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அப்படிப்பட்ட ஓர் அபாயம் ஈழத் தமிழர்களை எதிர் நோக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சுதந்திரக் காற்றைத்தான் சுவாசிக்க முடியவில்லை. சொந்த மண்ணில் வாழும் உரிமைகூட இல்லாமல் போகுமா?

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பா, தீவிரவாத ஒழிப்பா என்பதை, சமத்துவமும், சமதர்மமும் பேசும் சீனாவும், ரஷ்யாவும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லும் தார்மீகக் கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன.

இந்தியா எந்த வகையிலும் உதவவில்லை என்று சாதிக்கிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்ன நியாயம் என்று இந்த நாட்டின் சாமான்ய குடிமகன் கேட்கும் கேள்விக்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் செய்தார் என்பதை வாதத்துக்காக அல்ல உண்மை என்றே கூட ஒப்புக்கொள்ளத் தயார் ஒரே ஒரு கேள்வியுடன் – அதனால் ஈழத்தமிழர்களுக்கு இம்மியளவேனும் நன்மை விளைந்ததா? - அவருக்கு நன்கு பரிச்சயமான கடிதத்திலோ அல்லது கவிதையிலோ கூட பதில் சொல்லலாம்.

ஓர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உளம் நொந்து - வெந்து சொன்ன ஒரு வாக்கு: “ ஐயா நாங்கள் வயிற்றுக்குச் சோறு கேட்டோம். ஆனால் நீங்கள் வாய்க்கு அரிசி போட்டிருக்கிறீர்கள்” நம்மைச் சுடுகிறது ஐயா, சுள்ளென்று உரைக்கிறது. உதவத் தவறி விட்டோமோ என்று உள்ளம் கிடந்து குமைகிறது.

தான் செத்து மீன் பிடிக்கக் கூடாது என்ற தற்காப்பை - தன் நிலை நிற்பை அரசியல்வாதிகள் உறுதி செய்து கொள்வதில் - கடைபிடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது தலையாய விதி. ஆனால் மக்களின் தலை விதியை மற்றி எழுத இந்த விதியை உடைத்தெறிவது குற்றமோ, பாபமோ அல்ல.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சராசரி அரசியல்வாதி (Politician) என்ற நிலையிலிருது விடுபட்டு, ஓர் உன்னத ராஜதந்திரியாக (Statesman) உயரும் ஒரு பொன்னான வாய்ப்பை காலம் அவர்கள் காலடியில் கொண்டு கிடத்தி இருக்கிறது. ஈழத் தமிழர் உரிமைகளுக்கு உயிர் பெற்றுக் கொடுங்கள். உயிர்வாழ உரிமை பெற்றுக் கொடுங்கள். அந்த உன்னதப் பணிக்காக உலகம் உங்களைப் போற்றும், காலம் உங்களை வாழ்த்தும்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

நன்றி: யாழ்களம் மற்றும் முத்தமிழ் குழுமம்

8 comments:

rooto said...

நேற்று ராஜபக்ச விட்ட அறிக்கையில் , இந்தியாவை , சோனியா காந்தியை , மன்மோகன் சிங்கை மற்றும் தமிழக மக்களை பெரிதாக பாராட்டி அறிக்கை விட்டிருந்தான். இந்தியாவின் ஆதரவு தனக்கு மிகவும் நிம்மதி அளித்ததாகவும் ஐநா சபையில் தப்பிய மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டிருந்தான்.

அவன் சோனியாவையோ , மன்மோகனையோ பாராட்டியதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியம் இருக்கவில்லை. ஆனால் அவனது தமிழக மக்கள் மேலான பாராட்டுதான் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன ஒரு வஞ்சப் புகழ்ச்சி. அவன் வார்த்தைகளில் தொக்கி நிற்பது , ஈழத்தில் என்ன நடந்தாலும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். எதோ வருத்தப்பட்டு பேசிவிட்டு தமது கடமை முடிந்தது என்று போய்விடுவார்கள் எனபதுதான்.

இதே மாதிரியான ஒரு ஒத்த கருத்தை என்னுடன் பணிபுரியும் சற்றே நடுநிலைமையான ஒரு சிங்களவனும் பகிர்ந்திருந்தான் . நாங்கள் நினைத்தோம் இந்திய அரசும் தமிழக மக்களும் எங்களை ஒரு வழி பண்ணுவார்கள் என்று. ஆனால் தங்களை தாங்கள் வருத்திக் கொண்டு , வேலை நிறுத்தம் பண்ணிக்கொண்டு தீயிட்டு எரித்துக்கொண்டு அமைதியாகி விட்டனர். இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் பிரச்னை எமக்கு தெரியும். ஆனால் தமிழகத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை? தமிழகத்தில் மாட்டும் நாங்கள் ( சிங்களவர்கள் ) இருந்து இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்து துன்பம் அனுபவித்திருந்தால் , இன்னொரு விடுதலை

போராட்டமே நாம் அந்த நாட்டில் நடத்தியிருப்போம் என்றான். மேலும் தமிழக தமிழர்கள் எப்படி இந்தியா பெரிதும் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டாலும் சமாளித்துக் கொண்டு வாழ்கின்றனர் , ஏன் நீங்கள் அவ்வாறு இருக்க கூடாது என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டான் . அவனுக்கு ராஜீவ் கொலை பற்றியெல்லாம் விளக்கி தமிழகத்தை காப்பாற்ற முனைந்தேன். ஒரே ஒரு வசனம் சொன்னான் , நான் ஒரு சிங்களவன் , என்னக்கு தெரியும் 50 000 மக்கள் கொல்லப்பட்டது . அவர்களை கொல்லாது புலிகளை அழிக்கமுடியாது எனத் தெரிந்த எனக்கே சிறிது அனுதாபமுள்ளது. குற்ற உணர்ச்சி உள்ளது . ஆனால் எவ்வாறு தமிழக மக்கள் இந்திய படை அனுப்பி 10 000 மக்களை கொன்று குவித்த ராஜீவுக்காக , இந்த 50 000 மக்களின் கொலைக்கு காரணம் சொல்லி அமைதியாகி விட்டனர் என்று மேலும் கேட்டான். நான் தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களை அவனுக்கு எடுத்து கூறினேன். அவனோ , அதான் தேர்தலில் பார்த்தோமே தமிழக மக்களின் மன நிலையை என்றான் ஏளனமாக. என்னால் பெருமூச்சுதான் விட முடிந்தது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக , தமிழக மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தேர்தலை ஈழத்துக்கான கருத்துக்கணிப்பாக மாற்ற முற்பட்டு அதில் தோல்வியுற்று முழு உலகத்துக்கும் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை எனக் காட்டி தற்போது ராஜபக்ச கையால் சான்றிதழ் பெறவும் வைத்துவிட்டனர்.எதிகால வரலாற்றிலும் தமிழ் ஈனத் தலைவர்களாக பெயரும் எடுத்து விட்டனர்.

Sudhar said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5792:prabhananthikadal&catid=277:2009

ராஜ நடராஜன் said...

உள்ளூர் நாட்டாமை தமிழகம் தீர்த்து வைக்கவேண்டியப் பிரச்சினை இப்பொழுது சீனா,ரஷ்யான்னு ஹைஹோர்ட் பிரச்சினையாகிவிட்டது மடத்தனமான இந்திய அணுகுமுறையாலும் கருணாநிதியின் சுயநலத்தாலும்.பெரும்சிக்கல்களில் மாட்டிக்கொண்டோம் என்பதே உண்மை.இன்னும் ஒரு ஆட்சி மாறி இலங்கை அரசுக்கு செக் வைக்க நினைத்தாலும் கூட உலக அரங்கின் விளையாட்டுக்கு வந்து விட்ட இலங்கை, விளைவுகள் இன்னும் விசுவரூபமாகும் சாத்தியங்கள் மட்டுமே தெரிகிறது.அதனால் இனி தென்னக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை நிர்மாணிப்பதில் இலங்கை பெரும் பங்கு வகிக்கும்.

லக்கிலுக் said...

சோனியாவை திட்டியாயிற்று. கருணாநிதியை திட்டியாயிற்று. அடுத்து ஒட்டுமொத்தமாக தமிழக மக்களையும் துரோகிகள் என்று திட்டி தீர்ப்போம். திட்டத்தானே போறோம். வாயென்ன வலிக்கவா போகுது? :-)

கீழை ராஸா said...

எதார்த்தமான பதிவு...ஒருவருகொருவர் பழி போட்டுக்கொண்டு,கடந்த வரலாற்றைப்பற்றியே பேசிக் கொண்டிராமல் இன்றைய எதார்த்த நிலைபற்றி சிந்தித்து எழுதியிருக்கும் பதிவில் உண்மை ஒளிர்கிறது...
ஆனால் இதன் முடிவு தான் என்ன?

Barari said...

vaikku ilaiththavan pillaiyaar kovil andy enbaarkal.karunanudhiyai,thamiz naatai,indiyavai,soniyavai vasaipaadukiraarkal anal iththanai ayiram uyikalai suya nalaththirkkaka pali koduththa pirabaakaranai mattum potruvaarkal enna niyayam.

அறிவன்#11802717200764379909 said...

திரு.ஜப்பார்,அருமையாக எழுதப்பட்ட பத்தி.
காலம் அரசியல் வாதிகளுக்கான இந்த வாய்ப்பை சில காலமாகவே திறந்துதான் வைத்திருக்கிறது;ஆனால் ராஜதந்திரியாக உயர்வதற்கான அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டுமே!

ஆனால் புலிகளோ அவர்களது தலைமையோ பார்வைப்புலத்தில் இல்லாத இந்த நேரம் இந்த வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது என்பது உண்மை.தமிழக,இந்தய அரசியல்வாதிகள் உணர்வார்களா?

{பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ஆறு ஆண்டுகளில் வயது போய் இருக்குமா வந்திருக்குமா ?}

பின்னூட்டங்களிலேயே வந்திருக்கும் ஒரு இணைப்பில் காணப்பட்ட படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.(பார்க்காமலிருப்பது மன அமைதிக்கு நல்லது!).
பிரபாகரன் அல்லாத ஒருவரின் இறந்த உடலின் மீது அவ்வளவு வக்கிரத்தை இலங்கைப் படை காண்பிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

K.R.அதியமான் said...

///பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ///

பிரபாகரனை சந்தித்தது பற்றி சொல்லுங்களேன்..

LinkWithin

Blog Widget by LinkWithin