"இசைக்கு மொழி முக்கியமா என்று கேளுங்கள். பொதுவாகவே தேவை யில்லை என்ற பதிலே வரும். அப்படி வருமானால்,'இசைக்கு மொழி தேவை. கேட்பவனுக்குத் தேவையா இல்லையா என்பது இங்கே விவாதத்துக்குரிய பொருளே அன்று. இசைப்பவன், முதலில் தான் என்ன பாடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாட்டு சொல்கின்ற பொருளை, அதன் உணர்வை உள்ளே வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பொருளில் தான் கரைந்து போக வேண்டும். அப்படி ஒரு நிலையில் பாடுபவன் பாடினால், கேட்பவனுக்கு மொழி தேவை இல்லைதான். உணர்வுகளைப் புரிந்து கொள்ள இசை உதவும் " என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்கள் பதிலைப் பிடுங்குங்கள் என்று ஆலோசனை சொல்லியிருந்தார். இது முக்கியமான கணையாகத் தொடுத்தது போக வேறு சில நல்ல கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.
நானும் இதே அளவில் கேள்விகளைத் தயாரித்துக்கொண்டு போயிருந்தேன். மிகப் பெரிய பாடகியாக இருந்தபோதும் மிகவும் பணிவோடு எனது முகமன்களை ஏற்றுக் கொண்டார் அவர். நேர்முகம் ஆரம்பமானது.
"பொதுவாகவே இசைக்கு மொழி தேவையில்லை என்கிறார்களே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வியைத் தொடங்கி விட்டு "இல்லை" என்று சொன்னதும் கேட்கப்பட வேண்டிய அடுத்த கேள்விக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்குள் வந்தது பதில். "மிக அவசியம் தேவை" என்று. ஆடிப் போனேன் நான்.
எனது அடுத்தடுத்த கேள்விகள் அவர் இல்லையென்று சொன்னால் அவரை எப்படி மடக்குவது என்பதிலேயே இருந்ததால் என்ன கேட்பதென்று புரியாத சூழல். நிகழ்ச்சி வேறு நேரடி ஒலிபரப்பு என்பதால் அந்தக் குளிர்ப்பதன சூழலிலும் அநியாயத்துக்கு வியர்த்தது. சமாளித்துக்கொண்டு "அது எப்படி?" என்றேன்.
ஹரியண்ணன் சொன்ன அதே கருத்துக்களைத்தான் அவரும் சொன்னார். "கேட்பவர்களுக்கு வேண்டுமானால் மொழி அவசியமில்லாமல் இருக்கலாமேயொழிய பாடுபவர்களுக்கு மொழி மிக அவசியம்.. குறைந்தது என்ன பாடுகிறோம் என்பதையாவது தெரிந்து கொண்டால்தான் பாடும்போது அதை உணர்ந்து பாட இயலும்" என்று சொன்னார் அவர்.
"சில கீர்த்தனைகளைப் பாடும்போது இறைவனைத்தான் பாடுகிறோம்' என்று புரியும்.. ஆனாலும் 'இறைவா!' என்று அழைத்துப் பாடும்போது இன்னும் நெருக்கமாக அதனை உணர முடியும்" என்று சில பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார்.
'இந்துஸ்தானி இசைக்கும், கர்நாடக இசைக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றித்தான் பொதுவாக எல்லாரும் கேட்பார்கள் என்பதால் அவற்றிற்கிடையில் இருக்கும் வேறுபாட்டைப் பற்றிக் கேளுங்கள்' என்று ஹரியண்ணன் சொன்னது நினைவுக்கு வந்து கேட்டேன். மிக விரிவாகப் பாடிக் காட்டி விளக்கினார். இந்தக் கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன். என்றாலும் அவர் பாடிக் காட்டியது மிக இனிமையாக இருந்தது.
"ஏன் பொதுவாகவே கச்சேரிகளில் தமிழ்ப் பாடலைப் பாடுவதில் தயக்கம் காட்டுகிறீர்கள்?" என்று என் கச்சேரியை ஆரம்பித்தேன். "இல்லை. இப்போது மாற்றம் வந்திருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள்" என்று பதிலளித்தவரிடம், "தமிழ்ப் பாடல் என்றால் பாரதி மட்டும்தானா? பாரதிதாசனைச் சேர்த்துக் கொள்வது இல்லையா?" என்று கேட்டு வைத்தேன்.
"பாரதிதாசன் பாடல்களுக்காக முழுமையாக ஒரு 'ஆல்பமே' செய்திருக்கிறேன்" என்று அவர் சொன்னபோது புழு மாதிரி உணர்ந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் அவரைப் பற்றி நான் தெரிந்துகொண்டிருந்தது மிகக் குறைவே என்பதை உணர்ந்தேன். நேரடி ஒலிபரப்பிலேயே அதனைக் குறிப்பிட்டு, "எனது அறியாமையை தயவுசெய்து நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன்.
அதன் பின்னர் அவர் சாதகம் செய்வது, அவரது திரைப்பட நுழைவு, சின்னத்திரையில் அவரது குரல் ஆதிக்கம் ('சித்தி' தலைப்புப் பாடலைப் பாடுவதற்கு அழைப்பு வந்தபோது உடல்நலக் குறைவாக இருந்தும் அவருக்காகக் காத்திருந்து பதிவு செய்தார்களாம்) என்று பொதுவான விசயங்களுக்குத் திரும்பி விட்டோம். இடையிடையே அவரைச் சில பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டபோது சளைக்காமல் உற்சாகமாகப் பாடினார்.இரண்டடி தொலைவில் அவர் பாடக் கேட்டு ரசிப்பது சாதாரண விசயமா என்ன? அதுவும் காசு பணம் கொடுக்காமல்.
ஒலிபரப்பு முடிந்து வெளிவந்த பின் அவரது ஒத்துழைப்பிற்காக நன்றி சொன்னேன். ஒலிபரப்பின் நடுவில் தவறுக்காக மன்னிப்புக் கேட்ட தைரியத்திற்காக என்னைப் பாராட்டினார் அவர். அத்தனை பெரிய பாடகி மிக இயல்பாகவும், உற்சாகமாகவும் உரையாடிய மகிழ்ச்சி எனக்கு.
மறக்க முடியாத நேர்முகம் அது
10:53:36 - சனி, 05.02.05 -