31 March 2014

பெண்ணியத்தின் பேரலை??!! - குயின்

நாம பாட்டுக்கு சும்மா இருந்தாலும் நம்ம சுழி நம்மளைச் சும்மா இருக்க விடுறதேயில்ல. 
"பெண்கள் நாங்கள் இரசித்தது போல் ஒரு ஆண் இப்படத்தை இவ்வளவு ஆழமாக இரசிக்கவும் நேசிக்கவும் முடியுமா என்று தெரியவில்லை." என்று ஜெஸிலா எழுதியிருந்தார். அடடா! பெண்கள் ரசிக்கும் வாணி ராணி மாதிரி படம் போலிருக்கும் என்று போய் பார்த்தால்... அடக்கொடுமையே?! பெண்ணியத்தின் பேரலையில் சிக்கிக் கொண்டேன்

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்த திருமணம் சாத்தியமில்லை என்கிறான் காதலித்தவன். உடைந்து போகிறாள் அவள். அவள் பெயர்தான் ராணி. காதல் கணவனோடு அவன் விரும்பிய பாரிஸ் நகரத்தில் தேன் நிலவு கொண்டாடும் எண்ணத்தில் சேகரித்த காசை எடுத்துக் கொண்டு தனியாக தேன் நிலவுக்குக் கிளம்புகிறாள் அவள். (இமான் இசையில் வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் புதிய உலகம் புதிய உலகம் தேடிப் போகிறேன்..என்னை விடு பாடல் அப்போது என் காதில் ஒலித்தது தற்செயல்தான்)

பாரிஸ் நகரத்தில் அதுவரை வாழ்க்கையில் சந்தித்திருக்காத உலகத்தைச் சந்திக்கிறாள். வாழ்க்கையை அதன் போக்கில் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் என்று அவளது உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. அங்கிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கும் புதிய மனிதர்கள்,புதிய வாழ்க்கை,புதிய சம்பவங்கள் என்று இன்னொரு புது உணர்வை புது உலகைக் காண்கிறாள் அவள்.இந்தச் சம்பவங்க்ளும் மனிதர்களும் தரும் படிப்பினைகளில் தனது சுயம் என்ன என்பதை மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டு மீண்டும் தன்னிடமே திரும்பி வரும் காதலனை ஏற்றுக் கொள்ளாமல் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறாள் ராணி. இதுதான் நெஞ்சை அள்ளும் ராணியின் கதை. 

இந்த எழவைத்தான் ஆண்கள் பார்வையில் வேறு பார்க்க வேண்டுமாம்!! ;-)  பெண்கள் பார்வையில் மிகுந்த உற்சாகம் தரும் கதை என்று பெண்கள் பேருவகை கொள்கிறார்கள். பாவம்! கருணையுள்ள ஆண்களின் தயவால்தான் ஒரு பெண் தன்னைத் தானே உணர்ந்து கொள்ள முடிகிறது என்ப்தைத்தான் படம் முழுக்கத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ;-) 

குடும்ப நண்பரின் மகனோடுதான் நிச்சயமாகிறது அவளுக்கு. இருந்தும் கூட காதலனைச் சந்திப்பதாக இருந்தால்  கூடவே தம்பியையும் அனுப்பி வைக்கும் ஐதீகமான டெல்லி வாழ் குடும்பத்துப் பெண் திருமணமாகவில்லை என்ற சோகத்தில் இருக்கிறாள் என்பதற்காக பாரிசுக்கு தனியே தேன் நிலவு கொண்டாடக் கிளம்பி விடுவதை அனுமதிக்கும் லாஜிக் ஓட்டையோடு துவங்குகிறது படம்.

பாரிஸில் அவள் தங்கியிருக்கும் விடுதியில் வேலை நேரத்திலேயே விருந்தினருடன் ”வேலை பார்த்து” சம்பாதிக்கும் பெண்ணைப் பார்த்து முதலில் முகம் சுளிக்கிறாள் ராணி. ஒரு இக்கட்டான சூழலில் ராணியை அந்த பெண் காப்பாற்றி விட அவளோடு நட்பு தோன்றுகிறது. 
தகப்பன் இல்லாத குழந்தையை வளர்க்கத்தான் அவள் தன்னை விற்றுக் கொள்கிறாள் என்பதறிந்து அவள் மேல் மதிப்பு கொள்கிறாள் ராணி.. அவளோடு சிநேகம் முற்றி விடுகிறது.
இருவரும் இணைந்து இரவு கேளிக்கை நடன விடுதிக்குச் செல்கிறார்கள்.. செல்லும் முன்பாக தனது மார்க்கச்சையை கழற்றி விடுகிறாள் தோழி. அதிர்ந்து பார்க்கும் ராணியிடன் இதெல்லாம் இப்படித்தான் என்கிறாள் அவள். பெண் ’சுதந்திரத்தின்’ முதல் பாடத்தை அங்கே கற்றுக் கொள்கிறாள் ராணி.. இரவு விடுதியில் மது அருந்தி தன்னிலை மறந்து உற்சாகக் கூச்சலிட்டு களிக்கிறாள் ராணி..மது தந்த போதையில் கழிவிரக்கத்தில் தனக்கு நிகழ்ந்தவைகளை எண்ணி அழுகிறாள்.எல்லாம் பெண்ணியமயம்!! 

ஐயகோ! ஒரு இந்தியப் பெண் இப்படிச் செய்தால் அவள் மதிப்பு என்னாகுமென்று இயக்குனருக்கு உறைத்ததும் பாரிஸை விட்டு அவள் கிளம்பும் முன்னர் தன் தோழியிடன் ”இனிமேல் எல்லாருடனும் படுக்காதே! குடிப்பதை குறைத்துக் கொள்” என்று அறிவுரை வழங்கி விட்டுச் செல்கிறாள் ராணி

பாரிஸை விட்டு ஆம்ஸ்டர்டாம் போகிறாள். அங்கே விடுதியில் தனது அறையில் இன்னும் மூன்று ஆண்கள் இருப்பதறிந்து அதிர்கிறாள். ஆனால் அவர்கள் இவளைப் புரிந்து கொள்கிறார்கள். இவளுக்காக அறையை விட்டுத் தருகிறார்கள். இயல்பான சிநேகத்தோடு ஆண்களுக்கேயுரிய கண்ணியத்தோடு அவளுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்.. பாரிஸ் சிநேகிதியைப் போல இரவு விடுதிக்கு அவளை அழைத்துச் சென்று மது அருந்தச் செய்து அவளை மதிமறக்கச் செய்வதில்லை :-)) மாறாக அவளது தன்னம்பிக்கைக்குத் துணை நிற்கிறார்கள். ஆண்கள்தாம் எத்தனை நல்லவர்கள் என்பதை இந்தக் காட்சிகள் நமக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.

இங்கேயும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறாள் அவள். பாரிஸ் தோழியின் தோழி அவள். அவளும் அதே புராதனத் தொழிலைச் செய்து கொண்டு குடும்பத்திற்காக அந்தத் தொழிலைச் செய்வதாகஅதே புராதன காரணத்தைச் சொல்கிறாள். 

ஆம்ஸ்டர்டாமில் சந்திக்கும் ஒரு இத்தாலியனோடு அவளுக்கு "உடைவு"(’க்ரஷ்’சுக்கு ஜெமோ இதுவரை ஏதும் எழுதியதாகத் தெரியாததால் அடியேனின் தமிழ்ப்பணியாக இதைக் கருதிக் கொள்ளவும்:-) ஏற்படுகிறது.. அவளது சமையல் திறமையை ஊக்குவித்து (இதற்கும் ஓர் ஆண் மகன் தான் தேவைப்படுகிறது) அவள் வெற்றி பெற்றதும் பெண்ணிய தீவிரவாதிகளிடம்   "ஆட்டையைப் போடும்" ஆண்களுக்கேயுரிய  எண்ணத்தோடு இந்தியச் சமையலும் இத்தாலிய முத்தமும் சிறப்பானவை என்கிறான். பெண்ணிய சிந்தனை ஊறிப் போன பக்கியல்லவா அவள்? உடனே இந்திய முத்தம் மோசமானதில்லை என்று நிரூபிக்க அவனை முத்தமிடுகிறாள். பெண்ணியத்தின் கொடுங்காற்று ஆழிப் பேரலையாய் பொங்கிப் பிரவாகமெடுக்கும் இந்த காட்சியின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தேன் நான்.

பாலியல் இன்பம் துய்க்கும் விளையாட்டுப்பொருள் அங்காடியில் (தமிழுக்கு என் பங்கிற்கு இன்னொரு அருட்கொடை) என்ன ஏதென்றே தெரியாமல் தன் குடும்பத்தினருக்காகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறாள் அவள். இத்தனை அனுபவம் போதாதா? 

பெண்ணியத்தை அதிரடியாகக் கற்றுக் கொண்ட உற்சாகத்துடன் தாயகம் திரும்பி தன்னை ஏற்றுக் கொள்ள மறுத்தவனை மறுதலித்து பெண்ணியக் கொடியை இந்திய மரபில் நட்டி வைத்த பெருமையில் பீடு நடை போடுகிறாள் ராணி.. இவ்வளவுதான் சார் படம் :-)

படம் மொத்தமே இப்படி மொக்கையாகத்தான் இருக்கிறதா என்றால்.. அப்படி ஒரேயடியாக ஒதுக்கி விட முடியாது.. தன்னை மறுத்தவனை தானே நிராகரிக்கும் பெண்ணின் ஒற்றை வரிக்கதைதான் என்றாலும்.  ’இங்லிஸ் விங்க்லிஸின்’ பாதிப்பில் சில காட்சிகள் இருந்தாலும்,, பெண்ணியக் காமெடிகள் விரவிக் கிடந்து உற்சாகம் தந்தாலும்.....

படத்தின் மிகப் பெரும் கூட்டல் குறியீடு. கங்கனா.. 'தாம் தூம்' என்ற தமிழ்ப்படத்தில் பொம்மையாகத் தலைகாட்டிய அதே கங்கனாதான்.. படம் முழுக்க விரவி நின்று தனது அபாரமான நடிப்புத் திறமையால் படத்தை ஒற்றையாளாகத் தாங்குகிறார்.
திருமணம் வேண்டாமென்று சொல்லும்போது மறுத்து தவிப்பதாகட்டும், திருமணம் நின்றதும் துவண்டு போகும்போதும் சரி, தயக்கத்தோடு தனியே தேன் நிலவு செல்லும்போது கண்களில் காட்டும் மிரட்சியாகட்டும், இன்னொரு பெண்ணின் வாழ்க்கை முறையறிந்து வெளிப்ப்டுத்தும் வியப்பாகட்டும், ஆரம்பத்தில் தயங்கி பின்னர் ஆண் தோழர்களோடு இய்ல்பாக வளைய வரும் அழகிலாகட்டும்.. இறுதியாகத் தன்னை அலட்சியப்படுத்திய காதலனைப் புறம்தள்ளி தனியே நெஞ்சுயர்த்தி நடப்பதிலாகட்டும்..கங்கனாவின் முகபாவங்களும், உடல் மொழியும் அசத்துகின்றன.. நெஞ்சை அள்ளும் ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் கங்கனா..

கங்கனாவின் தோழர்களாக வரும் ரஷ்யனும், ஜப்பானியனும் ஃப்ரெஞ்சுக்காரனும் மனதில் நிற்கிறார்கள் குறிப்பாக ஓவியம் மூலம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரஷ்யன் ’ஒலெக்சாண்டர்’. அந்தப் பெயரை உச்சரிக்க முடியாமல் அவனை சிக்கந்தர் என்றழைக்கிறாள் ராணி.இவர்களுக்கிடையேயான நட்பும் அது தொடர்பான காட்சிகளும் படத்தின் மிக முக்கியமான பகுதிகள்.உடல் சார்ந்த ஈர்ப்புகளற்ற ஆண் பெண் நட்பின் சாத்தியத்தை இந்த காட்சிகள் மிக அழகாகச் சொல்கின்றன

பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் என்று நெஞ்சையள்ளுகிறது ஒளிப்பதிவு இசையும் பழுதில்லை. திரைக்கதை கச்சிதமாக இருக்கிறது.. படம் முழுக்க காதலின் வலியை மீறிய ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.. ஒரு சாதாரண டெல்லி நகரத்து நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் உலகத்திற்கும்  வெளி உலகத்திற்கும் இருக்கும் மிகப்பெரும் இடைவெளியைப் படம் சாமர்த்தியமாகச் சொல்கிறது. இட்டு நிரப்ப முடியாத இந்த இடைவெளியில் தங்களுக்கு இடமில்லாத சோகத்தைத்தான் பெண்கள் ரசித்திருக்கக் கூடுமென எண்ணுகிறேன்.. 

.. "குயின்" - நேர விரயமென்ற எண்ணம் எழாமல் பார்க்கலாம்..

06 January 2014

அன்புடன் லக்கிக்கு......

அன்பின் லக்கி

உன் பதிவைக் கண்டேன்.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

 // தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெறட்டுமே என்று, தேடி வாசித்த சிறுகதைகளை இரவு பகல் பாராமல் தட்டச்சி ‘அழியாச்சுடர்கள்’ போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றினார். தன்னலம் கருதாத ஒப்பற்ற சேவை. சென்ஷி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான். ஒரு வகையில் பார்க்கப்போனால் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு என்ன செய்தாரோ, அதைதான் சென்ஷியும் செய்திருக்கிறார். //

நன்றி லக்கி!! கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது

// பகிரல்தான் சென்ஷியின் நோக்கமென்றால், தன்னுடைய ஆர்வத்தை அச்சுக்கு கொண்டுவரும் வேடியப்பனின் செயல் குறித்து மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். விஷயம் தெரிந்ததும் வேடியப்பனுக்கு வேண்டிய உதவிகளை தாமாகவே முன்வந்து செய்திருப்பாரேயானால், அவரைவிட மனிதருள் மாணிக்கம் வேறு யாரும் இருக்க முடியாது.//

பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை.. சென்ஷி அதைத்தான் செய்தான். வேடியப்பன் சென்ஷியிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்சயம் சென்ஷி தானே முன்வந்து எல்லாவற்றையும் கொடுத்திருக்கக் கூடியவன் தான்.. வேடியப்பனுக்கு சென்ஷியை எப்படித் தெரிந்திருக்க முடியுமென்று இன்னொரு இரண்டணா நியாயத்தை நீ முன்வைக்கக் கூடும்


பண்புடன் குழுமத்தில்தான் இந்தக் கதைகளை சென்ஷி தொகுக்கத் துவங்கினான். அந்தக் குழுமத்தில் வேடியப்பனும் உறுப்பினராகத்தான் இருக்கிறார்.. அங்கே பெரிய அளவில் பங்களிப்பதில்லை என்றாலும் தன் கடையில் வரும் புத்தகங்களுக்கான விளம்பரங்களை அவ்வப்போது அங்கு இடவும் செய்திருக்கிறார். இருக்கிறாரே? புத்தகம் வெளியிடப் போவதாக முடிவானவுடன் அங்கேயே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? 

பண்புடன் குழுமத்தில் இது போலொரு தொகுப்பு வரப்போகிறதென்று விழியன் சொன்னதும் சென்ஷியின் உழைப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென்று நான் கோரிக்கை வைத்தபோதாவது அதனைச் செய்திருக்கலாமே? அதை விட்டு விட்டு ’மரியாதைக்குரிய எதிரிகளே!” என்று எழுதுவது எவ்வகை நியாயம்? 

// எஸ்ராவின் புத்தகம் எதையாவது தானே பதிப்பிக்க வேண்டுமென்று அவருக்கு ஆவல். ஆனால் எஸ்ராவோ ஏற்கனவே உயிர்மை உள்ளிட்ட நண்பர்களின் பதிப்பகங்களோடு டை-அப்பில் இருக்கிறார். எனவே எஸ்.ரா தொகுத்த நூறு சிறுகதைகளை புத்தகமாகக் கொண்டுவருவது என்று முடிவுசெய்து, அவரிடம் அனுமதி கேட்டார். /// 

ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும்

// புத்தகக்கடை வைத்திருப்பதால், நெட்டில் ஏற்றப்படாத கதைகளையும் சுலபமாக அவரால் தொகுக்க முடிந்திருக்கிறது. // 

அடரா சக்கை..அட்ரா சக்கை. பத்திரிகைக்காரன் லாஜிக்கா பொய் சொல்வான்னு எவ்வளவு தெளிவா சொல்ற லக்கி.. 

அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? 

ங்கொய்யால.. அவர் கடையில் இந்த 100 கதையும் கிடைக்குற மாதிரி எல்லா புத்தகமும் இருக்குன்னு சொல்லச் சொல்லு.. அவர் கால்ல சாஷ்டாங்கமா விழுந்து மன்னிப்பு கேக்குறேன். 

/// அறிவுப் பகிரல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை வீம்புக்கு செய்யக்கூடாது. முழுத்தொகுப்பு புத்தகமாக வரும்போது, அதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக பி.டி.எஃப். தொகுப்பை பதிவேற்றுவது என்பது நாகரிகமானவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.///

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே 50கதைகள் அடங்கிய மின்நூல் எஸ்.ராவிற்கு சென்ஷியால் அனுப்பப்பட்டிருக்கிறது. அப்போதே வேடியப்பன் இந்தக் கதைகளை எல்லாம் தொகுக்கிறார் என்று சென்ஷியிடம் சொல்ல ஏன் எஸ்.ராவால் முடியவில்லையாம்? அதுவே நாகரிகமென்றால் இந்த நாகரிகம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. 

// இதற்கு ஃபேஸ்புக்கில் வேடியப்பன் அப்படியொரு எதிர்வினையை ஆற்றியிருக்க வேண்டியதில்லை.//

இது மட்டும்தான் உருப்படியா நீ எழுதியிருக்க :-)

// சென்ஷியின் உழைப்புதான் பிரதானமானது என்று ஏற்கனவே இலக்கியத்தில் பழம் தின்று கொட்டையை சப்பியவர்கள்கூட போகிறபோக்கில் கமெண்ட் போட்டுவிட்டு செல்வது அதிர்ச்சியளிக்கிறது. நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்? அந்த உழைப்புக்காகதான் அவர் தொகுப்பாசிரியர்.// 

நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை

// என்னைப் பொறுத்தவரை தேடித்தேடி தட்டச்சி இணையத்தில் பகிர்ந்துக் கொண்டவர் என்பதால் சென்ஷிக்கு டிஸ்கவரி புக் பேலஸில், எஸ்.ரா தலைமையில் பாராட்டுவிழா கூட வேடியப்பன் நடத்தலாம். // 

இதனைச் செய்திருந்தால் ஏன் இத்தனை சிக்கல்கள்? ஒருவனின் உழைப்பைச் சுரண்டி விட்டு அவனுக்குண்டான அங்கீகாரத்தை மறுப்பது எவ்வளவு கேவலமானது? அதனால்தான் மயிர் பிளக்கிறார்கள் இந்த உழைப்பின் அருமை குறித்துத் தெரிந்தவர்கள்

/// கல்யாண வீட்டுலே மாப்பிள்ளையா இருக்கணும் அல்லது சாவு வீட்டிலே பொணமா இருக்கணும் மற்றும் கும்பலோடு கோயிந்தா போன்ற இணையக் கலாச்சார பண்பாட்டு செயல்பாடுகளில் ஒன்றாகதான் இந்த சர்ச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.///

ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..

/// நாமெல்லாம் டைம் பாஸுக்கு கமெண்டும், லைக்கும் போட்டுக் கொண்டிருக்கிறோம். வேடியப்பனுக்கு இது பொழைப்பு. சில லட்சங்களை இந்த புத்தகத்துக்காக முதலீடு செய்திருக்கிறார். நம்முடைய எண்டெர்டெயின்மெண்டுக்காக அவரது வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா? ///

யாரும் யாருடைய வாழ்க்கையோடும் விளையாடவில்லை.. அவர்தான் சென்ஷியின் உழைப்பை மதிப்பீடு செய்ய மறுத்து விட்டார்

//மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இனி வேலு மிலிட்டரியிலோ, சாம்கோவிலோ பிரியாணி வாங்கமாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டால் அது எவ்வளவு பெரிய காமெடியோ, அதற்கு இணையான காமெடிதான் இதுவும்.//  என்று சொல்லி விட்டு அப்புறம் என்ன அவர் பொழப்பு போயிடும்னு ஒரு கண்ணீர் நாடகம் ? பார்ப்பனர்கள் பிரியாணி வாங்காததால் வேலு மிலிட்டரி ஹோட்டல் மூடி விடாது. கவலை வேண்டாம்

வேடியப்பன் செய்வது தொழில்தான்.அதில் பிழையேதுமில்லை. செய்யும் தொழிலில் ஒரு தார்மீக நேர்மை இருக்க வேண்டும். அதைத்தான் அவரிடம் எதிர்பார்க்கிறோம். 

கடைசியில் மீண்டும் என்னைப் பதிவெழுத வைத்த பாவத்துக்கும் ஆளாகி விட்டாய். கர்த்தர் உன்னை ரட்சிப்பாராக!!

அன்புடன்
ஆசிப் மீரான்

29 September 2012

திலகம் இழந்த மலையாளத் திரையுலகு

மலையாள சினிமாவின் பெருந்தச்சனை காலம் பறித்துக் கொண்டு விட்டது. மலையாள சினிமாவின் என்றுதான் சொல்லியாக வேண்டும் நடிப்புலகின் 'உஸ்தாதா'ன திலகனைத் தமிழ்த் திரையுலகம் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் தாண்டி திலகனின் பல்வேறு பாவனைகள் மனதில் ஆழமான இடத்தையே பிடித்திருக்கின்றன

திலகனின் நடிப்பில் அவரது வசன உச்சரிப்பும் வசனத்தை அவர் வெளியிடும் நேர்த்தியும்தான் சிறப்பு. கவனத்தை ஈர்க்கும் அந்தக் 'கரகர' குரல் மூலமாக எந்தக் கதாபாத்திரத்தையும் சுலபமாக வளைத்தெடுக்க முடிந்த அற்புதமான ஆற்றல் நிறைந்த நடிகன் திலகன். ஆரம்ப காலங்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன திலகன், தனது இருப்பை நிரூபிக்க சில காலமானதென்றாலும் 'காட்டுகுதிர' உள்ளிட்ட படங்கள் திலகனின் திரைப்பாதையில் புதிய வழிகளைத் திறக்கச் செய்தன

'கண்ணெழுதி பொட்டும் தொட்டு' என்றொரு மலையாளப் படம். வசீகரிக்கும் மஞ்சு வாரியரிடம் வசப்பட்டு போகும் பாத்திரம் அவருக்கு.வாதம் வந்து தளர்ந்த உடல் பெண்மையின் அண்மையில் எப்படித் துள்ளாட்டம் போடுமென்பதை தனது அற்புதமான உடல்மொழியால் உணர்த்தியிருப்பார் திலகன். படுத்துக்கொண்டே அவர் செய்யும் சேட்டைகளும் மஞ்சுவைக் காணும்போதெல்லாம் ஜொள்ளொழுக அவர் காட்டும் பாவங்களும்..

திலகனுக்குக் கிரீடத்தை உருவாக்கித் தந்த படம் கிரீடம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலிலும் தனது அரசாட்சியை லாலேட்டனுக்கெதிராக நிரூபித்திருப்பார் திலகன்.  மலையாள சினிமா உலகின் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அவரது அப்பா வேசம் அலுத்துவிடாது. கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி மாயம் செய்யும் கலையெல்லாம் திலகனிடம் இல்லை. தனது பாத்திரத்தைத் தனது நடிப்பு பாணியின் மூலமாகவே தனித்துத் தெரியும்படி செய்யும் வித்தை தெரிந்த மகாகலைஞன் அவர்.

அப்பாவாக வரும்போது மிடுக்கு, பாசம், உறவுகள் தரும் வலி, குற்ற உணர்வு, மக்களிடம் இருக்கும் பேத உணர்வுகளைக் கண்டு கையாலாகாத்தன்மை என வெளிப்படும் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் முகத்தில் வித்தியாசம் காட்டத் தெரிந்தவர் திலகன். உதாரணமாக கிரீடத்தில் தன் மகனை எப்படியும் ஒரு இன்ஸ்பெக்டராக்கி  விட வேண்டுமென்று அவன் மீது நேசம் கொள்ளும் தந்தை. அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலில் குடும்பம் சிதறிப் போக தன் மகளுக்கே மாமாவாக வேலை செய்ய நேரும் அவலம் தன் மகனுக்குத் தெரிய வரும்போது அந்தக் குற்றவுணர்ச்சியில் பொசுங்கிப் போகும் காட்சிகள்.. அதுவரை இறுக்கமான முகபாவத்தோடு மகனை வெறுத்து உலா வரும் காட்சிகளோடு ஒப்பிட்டால் திலகன் என்ற நடிகனின் பரிமாணம் பிடிப்டலாம்

பவித்ரம் படத்தில் கல்யாண வயதில் மகனிருக்க தனக்கு மகள் பிறக்கப் போகும் செய்தியறிந்து வெட்கம், கவலை, எதிர்பார்ப்பு, ஆவல் கூடவே சமூகம் செய்யப் போகும் எள்ளல் குறித்த பயம் என்று அத்தனை உணர்வுகளைம் வரிசையாக வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த கலைஞர்களாலேயே முடியும். திலகன் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

ஸ்படிகம் - தமிழில் வீராப்பு என்று வந்ததென நினைக்கிறேன் லாலேட்டனுக்குப் பதிலாக சுந்தர் சி என்றபோதே அதிர்ந்து போயிருந்தேன். எனவே திலகனை யார் தமிழில் செய்திருப்பார்கள் என்பது குறித்து என்னால் சிந்திக்கவே முடியவில்லை. திலகனுக்கு தமிழில் மாற்று இல்லை என்றுதான் சொல்வேன்

பெருந்தச்சனைப் பற்றியோ, கல் குதிர பற்றியோ சந்தான கோபாலம் பற்றியோ சமீபத்திய இந்தியன் ருப்பி அல்லத் உஸ்தாத் ஹோட்டல் பற்றியோ என்ன சொல்வது? எல்லாமுமே திலகன் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்தான்.

குணச்சித்திர வேடங்கள் ஏற்பவர்களுக்குப் பொதுவாக நகைச்சுவை படங்களில் வேஷம் பொருந்தி வராது. ஆனால் நாடோடிக்காற்று, பஞ்சவடிப் பாலங்களில் தான் ஒரு அசாத்தியமான நகைச்சுவை நடிகரென்பதையும் நிரூபித்திருப்பார் திலகன்.

திலகனின் கடைசிநாட்கள் போராட்டம் நிறைந்தவை. தனியொரு மனிதனாக மலையாளத் திரை உலகை அவர் எதிர்த்து நிற்க நேர்ந்தது. நடிகர்கள் சங்கமான 'அம்மா' திலகனை அமைப்பிலிருந்து விலக்கம் செய்தது. திலகன் அதனைத் துணிச்சலோடு எதிர்கொண்டார்.

மம்மூட்டி, மோகன் லால் போன்ற மெகா ஸ்டார்களைக் குறித்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொதுக்குழு கூட்டத்தில் மம்மூட்டி 'திலகன் எங்களுக்குத் தகப்பன் மாதிரி' என்று பேசி கண்|ணீர் விட்டபோது முன்வரிசையிலிருந்து எழுந்து 'இது நீலிக்கண்ணீர்' என்று சொல்லும் மனதைரியம் அவருக்கு இருந்தது என்பதற்கு அவரது நெஞ்சுரம்தான் காரணம்.

ஆனாலும்.. அது மேலும் அவரைத் தனிமைப்படுத்தவே வழிவகுத்தது. அது திலகனுக்கும் தெரியும்தான்.என்றாலும்..அதுதான் திலகன். யாருக்கும் பயமில்லை. அந்தத் தைரியத்திற்காகவே ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தங்களது படங்களில்  திலகனை நடிக்க வைத்தனர். அத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் திலகன் நடிப்பதை 'அம்மா' கண்டுகொள்ளவில்லை என்பதை தமிழ்த்திரையுலகு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேதோ காரணங்களுக்காகத் திலகனைத் தனிமைப்படுத்திய மலையாள சினிமா உலகம் வெளிப்படையாகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தேயாக வேண்டுமென இயக்குனர் ரஞ்சித் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது

மம்மூட்டியோடு நேரடியாக அம்மா அமைப்பில் மோதினாலும் மம்மூட்டியின் மகனோடு இணைந்து 'உஸ்தாத் ஹோட்டலில்' நடிக்க அவர் மறுக்கவில்லை. அதைப்போன்றே மம்மூட்டியும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் திலகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் முதலில் சென்று பார்த்தவர் மம்மூட்டி என்பதும் திலகனுக்குண்டான மருத்துவச் செலவை அம்மா அமைப்பு ஏற்கும் என்று சொன்னதும் மம்மூட்டிதான் என்பதும் தனிப்பட்ட வைராக்கியங்களைத் தாண்டி சகநடிகர்கள் மீதான அக்கறை எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பறை சாற்றுவதாக அமைந்துவிட்டது. (யார் யாருடைய அரசியலுக்காகவோ பலியாகிவிட்ட வடிவேலுவின் நினைவு இங்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை).

திலகனின் மறைவில் உம்மன் சாண்டியும், பினராய் விஜயனும் துக்கம் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் தோழர்களோடு இணக்கம் கொண்டிருந்தவர் திலகன். இருந்தும் கட்சி பேதமின்றி அத்தனை அரசியல் தலைவர்களும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். (தமிழகத்து அரசியல்வாதிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்குத் தமிழக அரசியல் கெட்டழிந்து விட்டதென்பது இன்னொரு சோகம்)

தனது கலையின் மூலமாகவும் தனித்துவம் மிக்க நடிப்பின் மூலமாகவும் மட்டுமே அனைவரையும் அங்கீகரிக்க வைக்க முடிந்ததே திலகன் என்ற கலைஞனுக்கு அவனது கலைவாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி

மலையாள திரை உலகு தன் திலகம் இழந்து விட்டதென்பதைத் தவிர வேறென்ன சொல்ல? ஆழ்ந்த இரங்கல்கள் மலையாள திரையுலகின் ’ஒற்றையானு’க்கு

27 September 2012

உஸ்தாத் ஹோட்டல்

மிகப்பெரிதாக சிலாகிக்கப்பட்ட ‘தட்டத்து மராயத்தில்’ , ‘ஓர்டினரி’ படங்கள் ஏமாற்றம் தந்ததால் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல்தான் படம் பார்க்கத்துவங்கினேன் - ஆனால்..நெடுநாட்களாகி விட்டது இப்படியொரு மலையாளப் படம் பார்த்து

‘ராஜ மாணிக்கம்’ போன்ற மெகாஹிட் படம் தந்த இயக்குனர் அன்வர் ரஷீதிடம் மிகத் திறமையான இயக்குனர் ஒளிந்திருப்பதை ‘கேரள கஃபே’யில் அவர் இயக்கிய ‘ப்ரிட்ஜ்’ என்ற குறும்படம் மூலம் அறிந்ததுதான் என்றாலும் ஒருமுழுநீளப் படத்தில் அன்வர் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்த சிறுவன் ஃபைசல் தனது நான்கு சகோதரிகளால் வளர்க்கப்படுகிறான் பெண்களோடு வளர்ந்ததால் சமையலில் அதீதமான ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே வந்து விடுகிறது அவனுக்கு. முன்பொருகாலத்தில் சமையலாளாக இருந்த அவனது தகப்பனாருக்கோ ஃபைசியை தனது மிகப்பெரும் வணிக அரசாங்கத்தின் ராஜாவாக்கிப் பார்க்க ஆசை. கோழிக்கோடு நகரத்தில் 5 நட்சத்திர விடுதி கட்டை அதனை மகன் நிர்வகிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார் தந்தை. மகனுக்கோ எப்படியாவது சிறந்த சமையல்காரனாக ஆசை. தந்தையிடம் ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிக்கப் போவதாகச் சொல்லி ஸ்விட்சர்லாந்து சென்று படித்து முடித்து ஒரு வெள்ளைக்காரியின் காதலையும் லண்டனில் ஒரு பெரும் ஹோட்டலில் வேலையையும் சம்பாதித்து இந்தியாவுக்குத் திரும்பி வரும் ஃபைசிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. விமான நிலையத்திலிருந்து நேரடியாகப் ஸஹினாவைப் பெண் பார்க்கும் படலம். பெண்ணோடு தனியாகப் பேசுகையில், தனக்கிருக்கும் ஆசைகளைச் சொல்கிறாள் ஸஹினா. திருமணத்துக்குப் பின்னரும் தான் தொடர்ந்தும் வேலை செய்ய விரும்புவதாகவும் அதற்குத் தடையேதும் இருக்கக் கூடாதென்றும் தேவைப்பட்டால் திருமணத்திற்குப் பரிசாகக் கிடைக்கப் போகும் 5 நட்சத்திர விடுதியின் \இன்டீரியர் டிசைனை\யும் தானே செய்ய விரும்புவதாகவும் சொல்ல,  தான் ஹோட்டல் மானேஹ்மெண்ட் படிக்கவில்லை என்பதைசெஃப் என்பதை வெளிப்படுத்த அதிர்ச்சியடைந்த தந்தை மகனின் பாஸ்போர்ட்டையும் கிரெடிட் கார்டுகளையும் பிடிங்கிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி கடற்கரையில் சிறிய ஹோட்டல் நடத்தும் தனது தாத்தாவிடம் அடைக்கலமாகிறான். அங்கே சாப்பாடு ஹோட்டலின் அடிப்ப்டைகளையும் வாழ்க்கையையும் அவன் கற்றுக் கொள்வதையும் காதலை அடையாளம் காண்பதையும் செல்லுலாய்டில் சித்திரமாக்கியிருக்கிறார் அன்வர்.

படத்தின் கதையை எழுதியிருப்பவர் அஞ்சலி. ஒரு பெண் என்ப்தாலோ என்னவோ படம் முழுக்க ஒரு நிறைவுத்தன்மை இருக்கிறது. சமையலில் சேர்க்கப்படும் பதார்த்தங்களின் இயல்பைப் போல மசாலாவை அளவோடு கலந்திருப்பதோடு சிறிய அழகான வசனங்களின் மூலம் சுவையை ஏற்றியிருக்கிறார். வண்டி ஓரிடத்தில் நின்று விட லிஃப்ட் கேட்கிறான் ஃபைசி. அவன் கைகாட்டி வாகனங்கள் நிறுத்தாமல் போவதால் ஸஹினா கைகாட்ட வண்டி நிறுத்தப்படுகிறது. “பெண்களுக்கு எல்லாம் எளிது’ என்கிறான் ஃபைஸி. பர்தா அணிந்து ஃபைசி வேன் டிரைவருக்கு அருகில் அமர ஃபைசிக்கு அருகில் அமர்கிறாள் ஸஹினா. வழக்கம்போல வேன் ஓட்டுனர் ஃபைசியை பெண் என நினைத்து தனது கையை வைத்து சில்மிஷத்தைத் தொடர கடுப்பாகி ஸ்ஹினாவிடம் என்ன இது என்கிறான் மெல்லிய குரலில். ‘நீதானே பெண்களுக்கு எல்லாமே எளிதுன்னு சொன்னே’ என்கிறாள் அவள். இதுபோன்ற சின்னச் சின்ன விசயங்களில் கூட அஞ்சலி மேனன் நகைச்சுவை கல்ந்து செய்தி சொல்லியிருக்கிறார்

படம் அடிப்படையில் பேரன் ஃபைசிக்கும் தாத்தா கரீம்க்காவுக்குமான பந்தம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதனூடாகப் பல்வேறு வாழ்க்கைச் சித்திரங்களை அலசுகிறது. தாத்தா தரும் சுலைமானி (பாலில்லாத தேநீர்)யை அருந்தி விட்டு ‘இதுல என்னமோ சேர்த்திருக்கே. என்ன இது?’ என்கிறான் பேரன். ‘மொஹப்பத் (அன்பு)’ என்கிறார் தாத்தா. படம் முழுக்க மொஹப்பத்  விரவிக் கிடக்கிறது. இந்தக் காட்சியை ஒரு கவிதையைப் போல உருவாக்கியிருக்கும் நேர்த்திக்காகவே அன்வருக்கு ஒரு தனி சபாஷ் சொல்ல வேண்டும்.

‘யார் வேண்டுமானாலும் சமைச்சு வயிற்றை நிரப்பலாம். ஆனா மனசை நிரப்புறதுதான் உண்மையான கைப்புண்ணியம்’ என்று பேரனுக்குப் பாடமெடுக்கிறார் கரீம்க்கா. ‘சமைப்பது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்து விட்டேன். எத்ற்காகச் சமைக்கணும் என்று கற்றுக் கொள்வதற்காக உன்னிடம் அனுப்புகிறேன்’ என்று கடிதமெழுதி மதுரைக்கு பேரனை அனுப்பி வைக்கிறார். அங்கே அவன்காணூம் காட்சிகளூம் அனுபவமும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை அவனுக்கு உணர்த்துவதாக அமைகிறது - நமக்கும்

என்ன சொல்வது?
படம் முழுக்க நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. எங்கோ நடப்பது போலில்லாமல் நமக்குப் பரிச்சயமான விசயங்களாக எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி உணர்வைப் படம் முழுக்க கண்டுகொள்ள முடிகிறது

செகண்ட் ஷோ மூலமாக அறிமுகமான மம்மூக்காவின் மகன் துல்கார் சல்மானின் நடிப்பில் அசாத்தியமான தன்னம்பிக்கை மிளிர்கிறது. சந்தேகமேயில்லாமல் திலகன் படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அந்தச் சிரிப்பு அந்த உடல்மொழி அந்த வசன உச்சரிப்பு.. மரணப் படுக்கையில் கிடக்கும் இந்த மனிதன் எழுந்து வரமாட்டானா என ஏக்கம் நிறைகிறது மனதுக்குள்.. கட்டுப்பாடுகள் நிறைந்த இசுலாமிய குடும்பத்தில் பிறந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஜீன்ஸ் அணிந்து பாப் பாடகியாகவும் வலம் வரும் பாத்திரத்தில் நித்யா மேனன் அசத்துகிறார். அவரது கண்களும் உதடுகளும் கிடைக்கும் நேரத்திலெல்லாம் கொல்கிறது மனதை

லோகநாதனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் நெகிழ்ச்சியான இசை, தேர்ந்தெடுத்த நடிகர்களின் உழைப்பு, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள், மிக நேர்த்தியான கலை இயக்கம் என்று ஒரு நல்ல சினிமாவுக்குத் தேவையான முழுமையான கலவை உஸ்தாத் ஹோட்டலில் இருக்கிறது. ஆங்காங்கே வெடிச் சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் சில தருணங்கள் நெகிழ்ச்சியால் கண்களைப் பனியவும் வைக்கிறதென்பதில் இயக்குனர் அன்வர் மற்றும் அஞ்சலியின் உழைப்பு தெரிகிறது. மனம் முழுக்க நிறைவு தரும் ஓர் அனுபவமாக உஸ்தாத் ஹோட்டல் இருக்கிறது. நல்ல மலையாளப் படங்களை விரும்புகிறவர்கள் தவற விடக் கூடாத படம்

09 December 2010

ரொம்ப முக்கியம் இப்போ..

"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"

"என்னடே! நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"

"இப்படி அடுத்தவன் புண்ணியத்திலயே கடைசி வரைக்கும் காலத்தைக் கடத்துங்கடே"

"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"

"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"

"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"

"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"

"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"

"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"

"அப்ப இந்தக் கொடுமை தொடங்கி இன்னைக்கு ஏழாவது வருசத் துவக்கமா? அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல. டிசம்பர் ஒம்பதாம் தேதி அவுக கல்யாண நாளாம். அவங்க கல்யாண நாளும் அதுவுமால்லா பதிவு தொடங்குறதுன்னு ஒரு அராஜக முடிவெடுத்திருக்கான்?!"

"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"

"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"

"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"

"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"

*****

இதுவும் பழைய பதிவுதான். 2004ஆம் ஆண்டில் துவங்கிய கோட்டித்தனம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த, கற்றுக் கொண்ட, இழந்த, பெற்ற விசயங்கள் தாராளம். ஏராளம்.

// அறிவுபூர்வமா, ஆக்க பூர்வமா, இலக்கிய சாம்பார்,ரசம் எல்லாம் சொட்டும் வகையில் எழுதிட மாட்டேங்குற ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் என்னால உத்தரவாதமாத் தர முடியும். அதனால பயப்படாதீங்க!! //

இதுதான் என் வலைப்பூவை துவங்கியபோது நான் மக்களுக்களித்த வாக்குறுதி அதை எப்போதும் தொடர்வேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

நல்லா இருங்கடே!!

LinkWithin

Blog Widget by LinkWithin